18 வயதுக்கு முன்பு முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்துகொள்ளலாம்! நீதிமன்றம்

பருவமடைந்த முஸ்லிம் பெண்கள் 18 வயது நிரம்பாவிட்டாலும், தாங்கள் விரும்பிய நபரை திருமணம் செய்துகொள்ளலாம் என தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
18 வயதுக்கு முன்பு முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்துகொள்ளலாம்! நீதிமன்றம்


பருவமடைந்த முஸ்லிம் பெண்கள் (சிறுமிகள்) 18 வயது நிரம்பாவிட்டாலும், தாங்கள் விரும்பிய நபரை திருமணம் செய்துகொள்ளலாம் என தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், 18 வயது நிரம்பாவிட்டாலும் திருமணம் முடிந்து கணவருடன் செல்வதற்கு பெற்றோர்களின் அனுமதி தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

பருவமடைந்திருந்தால் பெண்கள் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற முஸ்லிம் விதிமுறைகளை சுட்டிக்காட்டி நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் ஜோடி, தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

தங்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தங்களை பிரிக்க முயல்வதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதி ஜஸ்மீத் சிங் முன்னிலையில் இன்று (ஆக. 23) நடைபெற்றது. விசாரணையின்போது சிறுமி 18 வயது பூர்த்தி அடையவில்லை என்பதும், இதனால், மணமகன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் சிறுமியின் பெற்றோர் தரப்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. 

வீட்டில் தன்னை அடித்துத் துன்புறுத்தியதால், தான் விரும்பிய நபரை திருமணம் செய்துகொண்டதாக சிறுமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் சிறுமிக்கு நீதிமன்றம் சார்பில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், உடலுறவு வைத்ததும், குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளதும் தெரியவந்துள்ளது. 

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, முகமதிய சட்டத்தின் கொள்கைகளை மேற்கோள் காட்டினார். அதில், 18 வயது பூர்த்தியடையாவிட்டாலும், முஸ்லிம் பெண்  பருவமடைந்திருத்தலே திருமணத்திற்கான தகுதியாக கூறப்படுகிறது. 

முஸ்லிம் விதிமுறைகளுக்குட்பட்டு திருமணமும் நடைபெற்றுள்ளதால், சிறுமி கணவருடன் இருக்கலாம் எனவும் பெற்றோர்கள் குறுக்கிடக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், முஸ்லிம் விதிமுறைகளின்படி திருமணம் செய்துகொண்ட பிறகே, இருவரும் விரும்பி உடலுறவில் ஈடுபட்டதால், இது பாலியல் வன்கொடுமையாகாது எனவும் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com