கேஜரிவால் தலைமையில் கூட்டம்: தொடர்பு எல்லைக்கு அப்பால் 12 எம்எல்ஏக்கள்?

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கேஜரிவால் தலைமையில் இன்று எம்எல்ஏக்கள் கூட்டம் அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.
கேஜரிவால் தலைமையில் கூட்டம்: தொடர்பு எல்லைக்கு அப்பால் 12 எம்எல்ஏக்கள்?
கேஜரிவால் தலைமையில் கூட்டம்: தொடர்பு எல்லைக்கு அப்பால் 12 எம்எல்ஏக்கள்?


புது தில்லி: தங்கள் கட்சி எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம் பேசி வருவதாகப் பகிரங்கக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கேஜரிவால் தலைமையில் இன்று எம்எல்ஏக்கள் கூட்டம் அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

இன்று 11 மணியளவில் புது தில்லி முதல்வர் கேஜரிவால் இல்லத்தில் நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், பாஜகவினர் பேரம் பேசிவருவது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு ஆம் ஆத்மியின் 62 எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், 62 எம்எல்ஏக்களில் சுமார் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில், அவர்களது பெயர்களை வெளியிடவும் மறுத்துவிட்டனர். "முதலில் அவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளட்டும்" என்று அந்த தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

முன்னதாக, தங்கள் எம்எல்ஏக்கள் நான்கு பேரை ஈர்க்க பாஜக முயற்சி செய்ததாகவும், அவர்களுக்குத் தலா ரூ. 20 கோடி வழங்க அக்கட்சி முன்வந்ததாகவும் ஆம் ஆத்மி கட்சி நேற்று குற்றஞ்சாட்டியிருந்தது.

இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங், தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

எங்கள் கட்சியைச் சேர்ந்த அஜய் தத், சஞ்சீவ் ஜா, சோம்நாத் பாரதி, குல்தீப் குமார் ஆகிய நான்கு எம்எல்ஏக்களை பாஜக தலைவர்கள் அணுகியுள்ளனர். இந்த நான்கு பேரும் பாஜகவில் இணைந்தால் தலா ரூ. 20 கோடி தருவதாகவும், மற்ற எம்எல்ஏக்களையும் அவர்கள் அழைத்து வந்தால் தலா ரூ. 25 கோடி தருவதாகவும் பேரம் பேசப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை ஏற்று பாஜகவில் சேராவிட்டால் அவர்கள் தில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா போல் பொய் வழக்குகளையும், சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவற்றையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பாஜக தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே விவகாரத்தில் பாஜக மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றது. ஆனால், எங்கள் கட்சியைச் சேர்ந்த மனீஷ் சிசோடியா விவகாரத்தில் அவர்களின் முயற்சி தோல்வியடைந்துவிட்டது. தற்போது எங்கள் எம்எல்ஏக்களை ஈர்க்க முயற்சி செய்கின்றனர். ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை அச்சுறுத்தவோ, விலைக்கு வாங்கவோ முடியாது. ஏனெனில் அவர்கள் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் என்றார்.

இதனிடையே ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "எங்கள் எம்எல்ஏக்களை ஈர்க்க நடந்துள்ள முயற்சி மிகவும் தீவிரமானதாகும்' என்று தெரிவித்திருந்தார்.

தில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் "சிபிஐ அமைப்பைத் தவறாகப் பயன்படுத்தியோ பணம் கொடுத்தோ எங்கள் எம்எல்ஏக்களை ஈர்க்க முயற்சிக்க வேண்டாம். எங்கள் எம்எல்ஏக்கள் உயிரைக் கூடத் துறப்பார்களே தவிர கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டார்கள்' என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான் ஆம் ஆத்மியைச் சேர்ந்த 12 எம்எல்ஏக்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com