ரூ.2 கோடிக்காக மனைவியைக் கொன்று 'சாலை விபத்து' போல நாடகமாடியவர் சிக்கியது எப்படி?

சாலையில், இடித்துவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் மோதியதில் பெண் ஒருவர் பலியான வழக்கை விசாரித்த காவல்துறைக்கு, அது விபத்து அல்ல, திட்டமிட்டப் படுகொலை என்ற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஜெய்ப்பூர்: சாலையில், இடித்துவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் மோதியதில் பெண் ஒருவர் பலியான வழக்கை விசாரித்த காவல்துறைக்கு, அது விபத்து அல்ல, திட்டமிட்டப் படுகொலை என்ற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்தது.

தனது மனைவி பெயரில் இருந்த இழப்பீட்டுத் தொகை ரூ.2 கோடிக்காக, கணவரே, மனைவியை கொன்றுவிட்டு சாலை விபத்து போல நாடகமாடியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் மேலும் ஒரு அதிர்ச்சி என்னவென்றால், பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி பெயரில் காப்பீட்டுத் தொகை செலுத்திய கணவரே, பிறகு அவரைக் கொன்று பணத்தைப் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 5ஆம் தேதி ஷாலு தேவி (32) தனது உறவினர் ராஜூவுடன் கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு எஸ்யுவி கார் அவர்களை இடித்துவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

பரபரப்பான நெடுஞ்சாலையில் நடந்த இந்த சம்பவம் விபத்து என பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.  அப்படியே அந்த வழக்கு நிறைவும் பெற்றுவிட்டது.

அண்மையில், ஷாலுவின் மரணத்தால், அவரது கணவருக்கு ரூ.1.90 கோடி விபத்துக் காப்பீட்டுத் தொகை கிடைக்கப்பெற்றுள்ளது என்ற தகவல் காவல்துறையினருக்குக் கிடைத்த போதுதான் அவர்களுக்கு எல்லாம் விளங்கியது.

விசாரணையை மீண்டும் தூசு தட்டும்போதுதான், கூலிப்படையை வைத்து ஷாலுவின் கணவர் மகேஷ் சந்திரா, தனது மனைவியைக் கொன்றதும், அவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், ஷாலுவும் மகேஷ் சந்திராவும் 2015-ல் திருமணமாகி, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இந்த ஆண்டு ஆரம்பத்தில் மகேஷ் சந்திரா, பிரிந்து வாழும் மனைவி மீது 2 கோடிக்கு விபத்து காப்பீடு எடுத்திருக்கிறார்.

இருபது நாள்களுக்கு முன்புதான், இந்த வழக்கை காப்பீட்டுத் தொகைக்காக நடந்த கொலையாக விசாரிக்கத் தொடங்கினோம். அப்போதுதான், ஷாலு, 2019ஆம் ஆண்டே மகேஷ் மீது வரதட்சணைக் கொடுமை புகார் கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

காப்பீடு எடுத்த பிறகு, ஷாலுவிடம் மகேஷ் பேசத் தொடங்கியிருக்கிறார். தனக்கு தெரிந்த ஒரு ஊரில் கோயில் இருப்பதாகவும், அங்கு 11 முறைச் சென்று வந்தால் நாம் நினைத்தது நடக்கும் என்றும் ஆசைவார்த்தைக் கூறியுள்ளார்.

அவர் நெடுஞ்சாலையில் வாகனத்தில் செல்லும் போது கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டதால், மனைவியை கோயிலுக்குச் செல்ல அறிவுறுத்தியதும், ஒரு சில மாதங்களில் அவரை கூலிப் படை வைத்துக் கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com