பிரதமர் இதற்கு விளக்கமளிக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே

பிரதமர் இதற்கு விளக்கமளிக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரம்-கர்நாடகம் எல்லைப் பிரச்னை குறித்து பிரதமர் விளக்கமளிக்க வேண்டுமென மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 
Published on

மகாராஷ்டிரம்-கர்நாடகம் எல்லைப் பிரச்னை குறித்து பிரதமர் விளக்கமளிக்க வேண்டுமென மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு நீதிபதிகளின் நியமனத்தில் கொலீஜியம் நடைமுறைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது சரியல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். 42வது மராத்வாடா சாகித்ய சம்மேளனத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி நாக்பூர்-மும்பை விரைவுச்சாலையை திறந்து வைக்க மகராஷ்டிரத்திற்கு வருகிறார். நாங்கள் அவரை வரவேற்போம். அவரது இந்தப் பயணத்தின்போது மகாராஷ்டிரம்-கர்நாடகம் எல்லைப் பிரச்னை குறித்து அவர் விளக்கமளிக்க வேண்டும். இது போன்ற பல பிரச்னைகளுக்கு அவர் விளக்கமளிக்க வேண்டியிருக்கும். மகாராஷ்டிரத்தின் சில கிராமங்களை உரிமை கோரும் கர்நாடக முதல்வர் குறித்து அவர் பேச வேண்டும் என்றார்.

மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகத்துக்கு இடையேயான எல்லைப் பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால், எல்லைப் பகுதிகளில் வன்முறை அதிகரித்துள்ளது. இந்த எல்லை பிரச்னை மாநிலம் மொழி வாரியாக 1957 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட போதிலிருந்தே தொடர்கிறது. மகாராஷ்டிரம் பெலகாவி தங்களுக்கு சொந்தமானது எனவும், அங்கு மராத்தி மொழிப் பேசும் மக்கள் கணிசமான அளவு இருப்பதாகவும் கூறி வருகிறது. அதேபோல தற்போது கர்நாடகாவில் உள்ள 814 மராத்தி மொழி பேசும் கிராமங்களையும் தங்களுக்கு சொந்தமானது என மகாராஷ்டிரம் கூறி வருகிறது.


கொலிஜீயம் நடைமுறை குறித்து உத்தவ் தாக்கரே பேசியதாவது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கொலிஜீயம் நடைமுறை குறித்து குறை கூறி வருகின்றனர். இது நாடாளுமன்ற அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தும் செயல். நீதிபதிகள் நீதிபதிகளை நியமிக்க முடியாது என்றால் பிரதமர் நீதிபதிகளை நியமிப்பாரா? பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 8 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் நீதிமன்றங்களில் அது குறித்து வழக்குகள் பதியப்பட்டு வருகின்றது. அரசின் இந்த நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்? என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com