
ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு அட்டவணை வெளியானது
ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு 2023-ல் பங்கேற்பதற்கான தகுதிகளில் மாற்றம் செய்யப்படவில்லை. அதே வேளையில் ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்டவற்றில் சேர்க்கைப் பெறுவதற்கான அளவுகோலை தேசிய தேர்வுகள் முகமை மாற்றியமைத்துள்ளது.
ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கான அட்டவணை மற்றும் அது தொடர்பான அறிவிக்கையை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு இருந்தது போல, தேர்வில் பங்கேற்பதற்கான தகுதிகள் மாற்றப்படவில்லை.
இதையும் படிக்க.. நீதிபதியான முதல் திருநங்கை அரசிடம் கேட்பது ஒன்றுதான்!.
ஆனால், ஐஐஐடி, என்ஐடி, சிஎஃப்டிஐ உள்ளிட்டவற்றில் சேர்க்கை பெறுவதற்கான அளவுகோலில், மாணவர்கள் தங்களது 12ஆம் வகுப்புத் தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண் (எஸ்.சி.,/எஸ்.டி. ஆக இருந்தால் 65 சதவீதம்) எடுக்க வேண்டும் என்பதை கூடுதல் தகுதியாக தேசிய தேர்வுகள் முகமை இணைத்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த தகுதி நீக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை அது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஐஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிலையங்களில் சேருவதற்கான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு அட்டவணை மற்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கும் காலம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்காக இந்தத் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில், ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு வரும் ஜனவரி 24 - 31ஆம் தேதிகளில் (26 குடியரசு நாள் நீங்கலாக) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. அவளை என்ன செய்வதென்று தெரியவில்லை: குழந்தையை கொன்ற தாய் வாக்குமூலம்
ஜேஇஇ முதல்நிலைத் தேர்வின் இரண்டாம் அமர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. அதன்படி, ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 15 முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை பெறப்படும்.
2023 - 24ஆம் கல்வியாண்டில் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு இரண்டு முறை நடத்தப்படவிருக்கிறது. முதல் முறை ஜனவரியிலும், இரண்டாவது தேர்வு ஏப்ரலிலும் நடைபெறும் என்றும், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம்உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படவிருக்கிறது.
இது தொடர்பான தகவல்களை பெற சான்டெஸ் தேசிய டெஸ்ட் அப்யாஸ் என சில செயலிகளும் உள்ளன. அவற்றை பதிவிறக்கம் செய்வதன் மூலம் மாணவர்கள் எளிதாக பல முக்கிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
என்ஐடி, ஐஐஐடி, ஐஐடி உள்ளிட்ட மத்திய பொறியியல்-தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கு ஜேஇஇ தோ்வு நடத்தப்படுகிறது.
ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு (மெயின்) மற்றும் ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தோ்வு என இரண்டு நிலைகளாக இந்தத் தோ்வு நடத்தப்படும். முதல்நிலைத் தோ்வு தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பிலும், முதன்மைத் தோ்வு ஏதாவது ஓா் ஐஐடி சாா்பிலும் நடத்தப்படும்.
முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும். மேலும், முதல்நிலைத் தோ்வில் முதல் 2.5 லட்சம் இடங்களில் வருபவா்கள் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா்.