ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணம் ராஜஸ்தானின் தௌசாவிலிருந்து மீண்டும் இன்று காலை தொடங்கியது.
காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் மூத்த தலைவர் சச்சின் பைலட் ஆகியோர் முன்னாள் காங்கிரஸ் தலைவருடன் நடந்து சென்றனர்.
காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தௌசாவில் உள்ள பாண்டிகுயில் இருந்து தங்கள் அணிவகுப்பைத் தொடங்கினர்.
இன்று பிற்பகல் அல்வாரில் நடைபெறும் பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காந்தி கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.
கடந்த செப்.7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட நடைப்பயணம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் தற்போது ராஜஸ்தானில் பயணித்து வருகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணம் 100 நாட்களை நிறைவு செய்தது.
இந்த நடைப்பயணம் டிசம்பர் 24 ஆம் தேதி தில்லியில் நுழைய உள்ளது. சுமார் 8 நாள்களுக்குப் பிறகு, உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் மற்றும் இறுதியாக, ஜம்மு காஷ்மீர் வரை செல்ல உள்ளது.
பூஜா பட், ரியா சென், சுஷாந்த் சிங், ஸ்வாரா பாஸ்கர், ரஷாமி தேசாய், அகன்க்ஷா புரி மற்றும் அமோல் பலேகர் போன்ற திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் உள்பட பலர் ஒற்றுமை நடைப்பயணத்தில் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர்.
முன்னாள் கடற்படைத் தலைவர் அட்மிரல் எல்.ராம்தாஸ், எதிர்க்கட்சித் தலைவர்களான சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே, என்சிபியின் சுப்ரியா சூலே, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட பிரபலங்கள், எழுத்தாளர்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் இந்த அணிவகுப்பில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.