'அமெரிக்காவில் ஹிந்தி உதவாது; ஆங்கிலக் கல்வியை பாஜக பறிக்கிறது' - ராகுல் குற்றச்சாட்டு

அமெரிக்காவில் ஹிந்தி உதவாது என்றும் மாணவர்களின் ஆங்கிலக் கல்வியை பாஜக பறிப்பதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அமெரிக்காவில் ஹிந்தி உதவாது என்றும் மாணவர்களின் ஆங்கிலக் கல்வியை பாஜக பறிப்பதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

வரும் 2024 மக்களவை தேர்தலையொட்டி, நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை(பாரத் ஜோடோ யாத்ரா) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து இந்த நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார். கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது  ராஜஸ்தானில் நடைப்பயணம் நடைபெற்று வருகின்றது. ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் 100 நாள்களைக் கடந்துள்ளது. 

செல்லும் வழியில் அவ்வப்போது அவர் மக்களிடையே பேசியும் செய்தியாளர்களை சந்தித்தும் வருகிறார்.

நேற்று ராஜஸ்தான் அல்வார் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பேசிய ராகுல் காந்தி, 'பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதை பாஜக தலைவர்கள் விரும்பவில்லை. ஆனால், அவர்களின் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்? ஆங்கில வழிப் பள்ளிகளுக்குத்தான் செல்கிறார்கள். உண்மையில், ஏழை விவசாயிகள், தொழிலாளர்களின் குழந்தைகள் ஆங்கிலம் கற்று வயல்களை விட்டு வெளியே சென்று முன்னேறுவதை அவர்கள் விரும்பவில்லை. 

உலகத்தின் மற்ற பகுதி மக்களுடன் பேச வேண்டும் என்றால் ஹிந்தி உதவாது. ஆங்கிலத்தில்தான் பேச முடியும். ஏழை விவசாயிகள், தொழிலாளர்களின் குழந்தைகள் அமெரிக்கர்களுடன் போட்டியிட்டு அவர்களின் மொழியைப் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

அந்த வகையில் ராஜஸ்தானில் 1,700 ஆங்கிலப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். அசோக் கெலாட் தலைமையிலான மாநில அரசு 1,000 ஆங்கிலப் பள்ளிகளைத் திறக்க ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 400 தாய்மொழி நடுநிலைப் பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வி நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன' என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com