
எந்த விதமான கரோனா பேராபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.
அரசிடம் போதுமான அளவுக்கு மனித வளம், படுக்கை வசதிகள், மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர் கைவசம் இருப்பதாகவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா பரவல் திடீரென வேகமெடுத்துள்ள நிலையில், முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது உள்ளிட்ட தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மக்களை மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இதையும் படிக்க: ரோஹித் சர்மாவை சந்திக்க வேண்டும்: வேகம் காட்டும் மும்பை இந்தியன்ஸ் புதிய பயிற்சியாளர்
இந்தியாவில் நிலவும் கரோனா சூழல் தொடா்பாக பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் வல்லுநா்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தில்லியில் புதன்கிழமை நடத்திய ஆய்வுக் கூட்டத்தைத் தொடா்ந்து, இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டது; மேலும், நாட்டில் கரோனா பரவல் கண்காணிப்பை வலுப்படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டார். மாநில அரசுகள் கரோனா பரவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், எந்த விதமான கரோனா பேராபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 50 நாள்களில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் 130 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று கண்டறியப்பட்டது. கரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் ஆந்திர அரசு அதனைத் திறம்பட எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. 12,292 சாதாரணப் படுக்கைகள், 34,763 ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதி கொண்ட படுக்கைகள், 8,594 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், குழந்தைகளுக்கான 1,092 தீவிர சிகிச்சைப் பிரிவுப் படுக்கைகள், 5,813 வெண்டிலேட்டர்கள் மற்றும் 54,000 தனிமைப் படுத்தலுக்கான படுக்கைகள் தயாராக உள்ளன.
இதையும் படிக்க: உலகளவில் கரோனா அதிகரிக்கிறது; இந்தியாவில் குறைகிறது: சுகாதாரத் துறை
புதிய வகை கரோனா பரவலைக் கண்டறிய விஜயவாடாவில் தேசிய மரபணு பரிசோதனைக் கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சுகாதாரப் பணியாளர்களுக்கு 100 சதவிதம் முன்னெச்சரிக்கை தடுப்பூசியும், முன்களப் பணியாளர்களுக்கு 93 சதவிகிதம் முன்னெச்சரிக்கை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. முகக் கவசம், கிருமிநாசினிகள், கையுறை மற்றும் கரோனா பாதுகாப்பு உடை போன்றவை போதுமான அளவுக்கு கையிருப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.