
ஆதிர் ரஞ்சன் சௌத்ரி
கரோனா பரவல் கடந்த மாதமே தீவிரமடைந்த நிலையில் குஜராத்தில் ஏன் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார் என காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
நேற்று முதல் மத்திய அரசு இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று ஆலோசனை மேற்கொண்ட நிலையில் இன்று பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். மேலும், கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, 'இப்போது ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப் பயணம் தில்லியில் நுழையப் போகிறது. இந்த நேரத்தில் கரோனா தொற்று பரவுவதாக பாஜக அரசு கூறுகிறது. உண்மையில் இந்த ஒமைக்ரான் திரிபு வகை வைரஸ்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட்-நவம்பர் இடையே கண்டறியப்பட்டன.
இந்த தகவல் கிடைத்தபின்னரும் குஜராத் தேர்தலுக்காக பிரதமர் மோடி ஏன் பிரசாரம் செய்தார்? சமீபத்தில் நாடாளுமன்றத்தில் திணை உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது ஏன்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க | வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை தொடக்கம்: மத்திய அமைச்சர் தகவல்