துனிஷா தற்கொலையில் 'லவ் ஜிகாத்'? பாஜக குற்றச்சாட்டும் காவல் துறை பதிலும்!

நடிகை துனிஷா தற்கொலைக்கு கட்டாய மதமாற்றமே (லவ் ஜிகாத்) காரணம் என்ற பாஜக தலைவர் கிரீஷ் மகாஜன் குற்றச்சாட்டுக்கு மகாராஷ்டிர காவல் துறை பதிலளித்துள்ளது. 
துனிஷா சர்மா , ஷீசன் கான்
துனிஷா சர்மா , ஷீசன் கான்


நடிகை துனிஷா தற்கொலைக்கு கட்டாய மதமாற்றமே (லவ் ஜிகாத்) காரணம் என்ற பாஜக தலைவர் கிரீஷ் மகாஜன் குற்றச்சாட்டுக்கு மகாராஷ்டிர காவல் துறை பதிலளித்துள்ளது. 

மகாராஷ்டிரத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் நடித்து வருபவர் துனிஷா சர்மா. இவர் தனது சக நடிகர் ஷீசனை காதலித்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாள்களுக்கு முன்பு, காதலை முறித்துக்கொள்வதாக ஷீசன் தெரிவித்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு நடிகை துனிஷா ஆளாகியுள்ளார். 

‘அலி பாபா: தஸ்தான்-இ-காபூல்’ என்ற தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு மும்பையின் வசாய் பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பின்போது கழிவறையில் துனிஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

இதனைத் தொடர்ந்து துனிஷாவின் தாயார் அளித்த புகாரின் பேரில் காதலன் ஷீசனை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையின்போது தில்லியைச் சேர்ந்த கால் சென்டர் ஊழியரான ஷ்ரத்தா வால்கர், காதலன் அஃபாதாப்பால், வெட்டிக் கொலை செய்யப்பட்டு, உடலை உடலை 33 துண்டுகளாக்கி வீசியெறிந்த சம்பவம் தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாக வாக்கு மூலம் அளித்துள்ளார். 

தில்லியில் காதலனால் நடந்த இந்த கொடூரக் கொலையின் பின்னணியில் மதமாற்றம் இருப்பதாக, பல தலைவர்கள் குற்றம் சாட்டினர். அதாவது முஸ்லீம் ஆண்கள் ஹிந்து பெண்களை திருமணம் செய்துகொண்டு, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாக ஷ்ரத்தா கொலை வழக்கு தொடர்பாக சில தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 

லவ் ஜிகாத் என குற்றச்சாட்டு

இதனால் மனமுடைந்த ஷீசன், துனிஷா உடனான காதலை முறித்துக்கொண்டுள்ளார். இருவரும் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக காவல் துறை விசாரணையில் ஷீசன் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், நடிகை துனிஷா கொலை வழக்கின் பின்னணியில் லவ் ஜிகாத் முக்கிய காரணமாக இருக்கலாம் என பாஜக மாநில தலைவர் கிரீஷ் மகாஜன் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவைச் சேர்ந்த பலர், துனிஷா தற்கொலையை கட்டாய மத மாற்றத்துடன் தொடர்புபடுத்தி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறை துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரகாந்த் ஜாதவ் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். துனிஷா தற்கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. இருவரின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் வேறு பெண்களுடன் தொடர்பு, மிரட்டல், லவ் ஜிகாத் என எந்த குற்றச்சாட்டுக்கான அறிகுறிகளும் தென்படவில்லை என விளக்கமளித்துள்ளார்.

காதலன் வாக்குமூலம்

துனிஷா இறப்பதற்கு சில நாள்கள் முன்புகூட தற்கொலைக்கு முயன்றாள். ஆனால் அப்போது நான் உடன் இருந்ததால், அவளைக் காப்பாற்றினேன். துனிஷாவின் தாயாரிடமும் இது தொடர்பாக கூறி கவனித்துக்கொள்ள வேண்டினேன் என காவல் துறை வாக்குமூலத்தில் ஷீசன் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com