ராகுலுக்கு மட்டும் எப்படி குளிரவில்லை? டி-ஷர்ட் பற்றி என்னென்ன சொல்றாங்க பாருங்க!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொள்ளும் நடைப்பயணம் கூட அவ்வளவு பேசுபொருளாகவில்லை. ஆனால், அவர் நடுங்கும் குளிரில் வெறும் டி-ஷர்ட் மட்டும் அணிந்து கொண்டிருப்பது பல கிசுகிசுக்களுக்கு ஆளாகியிருக்கிறத
ராகுல் காந்தியின் டி-ஷர்ட் விவகாரம்
ராகுல் காந்தியின் டி-ஷர்ட் விவகாரம்

புது தில்லி : காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொள்ளும் நடைப்பயணம் கூட அவ்வளவு பேசுபொருளாகவில்லை. ஆனால், அவர் நடுங்கும் குளிரில் வெறும் டி-ஷர்ட் மட்டும் அணிந்து கொண்டிருப்பது பல கிசுகிசுக்களுக்கு ஆளாகியிருக்கிறது.

தற்போது ராகுல் காந்தி அணிந்திருப்பது சாதாரண டி-ஷர்ட் தானா என்ற சர்ச்சை இரண்டாவது முறையாக எழுந்திருக்கிறது.

ஏற்கனவே, அவர் அணிந்திருப்பது விலை மதிப்புள்ள டி-ஷர்ட்.. இல்லையில்லை சாதாரண டி-ஷர்ட் என்ற பட்டிமன்றம் வைக்காத குறைக்கு பாஜகவும் காங்கிரஸ் கட்சிகளும் விவாதித்து முடித்திருந்தன.

ஒரு பக்கம் குளிர் வாட்டிவதைக்கும் நிலையில் தற்போது மீண்டும் இந்த விஷயம் பேசுபொருளாகியிருக்கிறது.

52 வயதாகும் ராகுல் காந்தி மேற்கொண்டிருக்கும் 3,570 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்திய ஒற்றுமை நடைப்பயணம் செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்தான், ராகுல் அணிந்திருப்பது பர்பெர்ரி டி-ஷர்ட் என்றும், அது மிக விலை அதிகமுடையது என்றும் ரூ.41,257 என்று விலைப்புள்ளியுடன் பாஜக புகைப்படம் போட்டு சர்ச்சையை வெற்றிகரமாகத் தொடங்கி வைத்திருந்தது.

இதற்கு காங்கிரஸ் தரப்பில், பாஜக தேவையற்ற பிரச்னைகளில் கவனம் செலுத்துகிறது என்று பதிலடி கொடுத்திருந்தது.

இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, பிராண்டட் ஆடைகளைத் தவிர்த்து சாதாரண டி-ஷர்ட்களை ராகுல் காந்தி அணிந்து கொண்டார்.

மீண்டும் டிசம்பர் 21ஆம் தேதி நடைப்பயணம் ஹரியாணாவை எட்டிய போது, மீண்டும் ராகுலின் டி-ஷர்ட் விவகாரம் பூதாகரமாக்கப்பட்டது. காரணம், நடுங்கும் குளிரில் ராகுல் காந்தி குளிரிலிருந்து தப்பிக்க எந்த ஆடைகளையும் அணியாமல் சாதாரணமாக அதுவும் அரைக்கை வைத்த டி-ஷர்ட் அணிந்து கொண்டிருந்ததுதான்.

ராகுல் காந்தியுடன் வந்த மற்ற அனைவரும் குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ளும் ஆடைகளை அணிந்துகொண்டிருக்க ராகுலுக்கு மட்டும் எப்படி குளிரவில்லை? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில்தான், டிசம்பர் 24ஆம் தேதி ராகுல் காந்தியே, தனது டி-ஷர்ட் பற்றி பேசியுள்ளார். தில்லியில் நடைப்பயணத்தின்போது செங்கோட்டையில் உரையாற்றிய ராகுல் காந்தி, ஊடகங்கள் தன்னிடம், எப்படி உங்களுக்கு குளிரவில்லை? என்று கேட்கிறார்கள். நான் என்ன நினைக்கிறேன் என்றால், என்னிடம் இவ்வாறு கேட்கும் ஊடகங்கள், ஏன் இதேக் கேள்வியை விவசாயிகளிடமும், கூலித் தொழிலாளிகளிடமும், ஏழை வீட்டில் பிறந்த குழந்தைகளிடமும் கேட்பதில்லை என்பதைத்தான் என்று கூறியிருந்தார்.

டிசம்பர் 28ஆம் தேதி ராகுல் காந்தியின் டி-ஷர்ட் விவகாரம் மீண்டும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. காரணம், காங்கிரஸ் கட்சியின் 138வது நிறுவன நாளை முன்னிட்டு, புது தில்லியில் முக்கிய  தலைவர்களின் நினைவிடங்களில் நடுங்கும் குளிரில் மற்றவர்கள் குளிரிலிருந்து காக்கும் ஆடைகளை அணிந்திருக்க ராகுல் வழக்கம் போல அனைவரின் ஆச்சரியங்களையும் அள்ளிக்கொள்ளும் அதே வெள்ளை டி-ஷர்ட் அணிந்திருந்தார்.

எப்படி இது உங்களுக்கு சாத்தியமாகிறது என்று ஊடகவியலாளர்கள் கேட்க.. எத்தனை நாளைக்கு முடிகிறதோ அவ்வளவு நாள்கள் தொடர வேண்டியதுதான். எப்போது முடியாமல் போகிறது என்று பார்க்கலாம் என்று பதிலளித்திருந்தார்.


ராகுல் காந்தி கடந்த காலங்களில் எல்லாம் குளிர்காலத்தில் வழக்கமாக கையில்லாத கோட் போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு குளிரிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்வது வழக்கம்தான்.  முக்கிய தலைவர்களை சந்தித்த புகைப்படங்களும் அப்போது வெளியாகி அதனை உறுதி செய்திருக்கின்றன.

அவ்வளவு ஏன்.. 2018ஆம் ஆண்டு ராகுல் அணிந்திருந்த விலை உயர்ந்த ஆடை குறித்தும் மேகாலயா பாஜக கடுமையான விமரிசனமும் செய்திருந்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.

இதையெல்லாம் தாண்டி, அதிகாலை வேளையில், டிசம்பர் 26ஆம் தேதி தில்லியில் நடுங்கும் குளிரில், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் நினைவிடங்களை ராகுல் காந்தி வெறும் டி-ஷர்ட் அணிந்து நினைவஞ்சலி செலுத்தியதுதான் மீண்டும் சர்ச்சை வெடிக்கக் காரணமாகியிருக்கிறது.

அவருடன் இருந்த பல காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கிலோ கணக்கில் குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ளும் ஆடைகளை அணிந்துகொண்டுதான் ராகுலுடன் வலம்வந்தனர்.

இதற்கு கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், 6 டிகிரி செல்சியஸ் குளிர்நிலையில் ஒருவரால் எப்படி சாதாரண டி-ஷர்ட் அணிந்து கொண்டு வர முடியும். அதற்கு சுயக்கட்டுப்பாடு மற்றும் ஆத்ம பலம் உள்ளிட்டவற்றால்தான் முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 25 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை நடைப்பயணத்துக்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. இது மீண்டும் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி ஜனவரி 26ஆம் தேதி ஸ்ரீநகரில் நிறைவு பெறவிருக்கிறது. அனைவரும், இந்த நடைப்பயணம் ஜம்மு - காஷ்மீர் செல்லும் போதாவது, ராகுல் காந்தி குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ளும் ஆடைகளை அணிந்து கொள்வாரா என்பதை தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com