திரிபுரா பாஜக எம்எல்ஏக்கள் இருவர் ராஜிநாமா

திரிபுரா சட்டமன்றத்திலிருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் இருவர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். 
திரிபுரா பாஜக எம்எல்ஏக்கள் இருவர் ராஜிநாமா

திரிபுராவில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் முதல்வர் பிப்லப் குமார் தேப்வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சட்டப் பேரவை மற்றும் கட்சியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளனர். 

பாஜக எம்.எல்.ஏக்களான சுதீப் ராய் பர்மன் மற்றும் ஆஷிஷ் குமார் சாஹா ஆகியோர் தங்கள் ராஜிநாமா கடிதத்தை சபாநாயகர் மற்றும் பாஜக மாநில தலைவரிடம் அளித்தனர். கடந்தாண்டு மற்றொரு எம்எல்ஏ ஆஷிஸ் தாஸ் கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தார். ஆனால் அவர் கட்சி மாறுதலுக்கு எதிரான சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

முன்னாள் அமைச்சரான ராய் பர்மன், டெப்பை வரம்பு மீறி அதிகாரம் செய்பவர் என்று வர்ணித்தார். மக்களுக்காக உழைக்க முடியாததால் தானும் சாஹாவும் பாஜகவிலிருந்து விலகினோம் என்றார். 

பாஜக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் மக்கள் துயரத்தில் உள்ளனர் என்று ராய் பர்மன் சாஹாவுடன் தில்லிக்குப் புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் கூறினார். இவர்கள் இருவரும் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து கட்சியில் இணைவார்கள் என்று திரிபுராவில் ஊகங்கள் பரவி வருகின்றன. 

இருவரின் விலகல் மாநிலத்தில் அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தாது என்று பாஜக தெரிவித்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்டது. முதல்வர் மற்றும் பிற கட்சித் தலைவர்களை வெளிப்படையாக விமர்சித்து வந்தனர். அவர்களின் ராஜிநாமா பாஜகவுக்கு முக்கியமல்ல என்று அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் நபேந்து பட்டாச்சார்ஜி கூறினார்.

2018-ல் பாஜக 60 இடங்களில் 36 இடங்களைக் கைப்பற்றி இடது முன்னணியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் கூட்டணிக் கட்சியான திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணிக்கு 8 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com