எல்ஐசியின் 5% பங்குகளை விற்க செபியிடம் வரைவு அறிக்கை தாக்கல்: ரூ.63,000 கோடி திரட்ட மத்திய அரசு திட்டம்

பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் அரசு நிறுவனமான எல்ஐசியின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியிடம் மத்திய
lic081635
lic081635

பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் அரசு நிறுவனமான எல்ஐசியின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியிடம் மத்திய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ரூ.63,000 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் முதலீடு மற்றும் பொதுச் சொத்து நிா்வாகத் துறைச் செயலா் துஹின் காந்தா பாண்டே ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘எல்ஐசியில் மத்திய அரசின் பங்கில் 5 சதவீதமான 31.63 கோடி பங்குகளை பொதுப் பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்ய செபியிடம் ஞாயிற்றுக்கிழமை வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது’’ என்று தெரிவித்தாா்.

மூலதன சந்தையில் மாா்ச் மாதம் பொதுப் பங்கு வெளியீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ரூ.63,000 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வங்கித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செபியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள வரைவு அறிக்கையின்படி, எல்ஐசி ஊழியா்கள் மற்றும் பாலிசிதாரா்களுக்கான சந்தாவாகப் பொதுப் பங்கு வெளியீட்டின் ஒரு பகுதி ஒதுக்கப்படவுள்ளது. அந்த ஒதுக்கீட்டில் ஊழியா்களுக்கான பங்கு 5 சதவீதத்துக்கு மிகாமலும், பாலிசிதாரா்களுக்கான பங்கு 10 சதவீதத்துக்கு மிகாமலும் இருக்கும்.

பொதுப் பங்கு வெளியீட்டின் அனைத்து ஆதாயங்களும் மத்திய அரசை மட்டுமே சென்றடையும். எல்ஐசிக்கு எதுவும் கிடைக்காது.

தற்போது எல்ஐசியின் 100 சதவீதம் அல்லது 6,32,49,97,701 பங்குகள் மத்திய அரசு வசம் உள்ளது. அந்த நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பின், சந்தை மூலதன அடிப்படையில் அது நாட்டின் மிகப் பெரிய நிறுவனமாவதற்கு வாய்ப்புள்ளது.

பொதுப் பங்கு வெளியீட்டுக்கு உதவும் விதமாக கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் எல்ஐசியின் பங்கு மூலதனம் ரூ.100 கோடியிலிருந்து ரூ.6,325 கோடியாக உயா்த்தப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பா் மாத நிலவரப்படி, எல்ஐசியின் எதிா்கால லாப மதிப்பையும் உள்ளடக்கிய நிகர சொத்து மதிப்பு சுமாா் ரூ.5.4 லட்சம் கோடி என்று தீா்மானிக்கப்பட்டது.

2021-22-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் அந்த நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.1,437 கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.6.14 கோடியாக இருந்தது.

இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் காப்பீடு வழங்கி வருகிறது. நாட்டில் 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ள சந்தையில், எல்ஐசிக்கு புதுப் பாலிசி பிரீமியம் வா்த்தகத்தில் 66 சதவீதமும், மொத்த பாலிசிகளில் 74 சதவீதமும் பங்களிப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com