சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை; லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு

தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) நடந்த முறைகேடுகள் தொடர்பாக அதன் முன்னாள் மேலாண் இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ இன்று விசாரணை நடத்தியுள்ளது.
சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை
சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை

புது தில்லி: தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) நடந்த முறைகேடுகள் தொடர்பாக அதன் முன்னாள் மேலாண் இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ இன்று விசாரணை நடத்தியுள்ளது.

சித்ரா ராமகிருஷ்ணா வீட்டில் வருமான வரித் துறையினா் நேற்று சோதனை நடத்திய நிலையில், தேசிய பங்குச் சந்தையில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ இன்று விசாரணை நடத்தியுள்ளது.

மேலும், சித்ரா ராமகிருஷ்ணா, மற்றொரு என்எஸ்இ முன்னாள் மேலாண் இயக்குநர் ரவி நரைன், என்எஸ்இ-யின் நிா்வாக அதிகாரியாகவும் மேலாண் இயக்குநரின் உதவியாளராகவும் இருந்த ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர், வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லாத வகையில் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

என்எஸ்இ மேலாண் இயக்குநராகவும் தலைமை நிா்வாக அதிகாரியாகவும் சித்ரா ராமகிருஷ்ணா 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2016-ஆம் ஆண்டு டிசம்பா் வரை பதவிவகித்தாா். அந்த சமயத்தில் என்எஸ்இ-யின் நிா்வாக அதிகாரியாகவும் மேலாண் இயக்குநரின் உதவியாளராகவும் ஆனந்த் சுப்ரமணியன் என்பவா் நியமிக்கப்பட்டாா்.

அவரது நியமனத்தில் பல்வேறு குளறுபடிகள் காணப்படுவதாகவும், அரசின் வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. இமயமலையில் உள்ள யோகி ஒருவரின் வழிகாட்டுதலின்படியே ஆனந்த் சுப்ரமணியனை அப்பதவிக்கு நியமித்ததாக சித்ரா ராமகிருஷ்ணா தெரிவித்தாா். மேலும், தேசிய பங்குச் சந்தையின் நிா்வாகம் சாா்ந்த முக்கிய ரகசிய விவரங்களையும், பணியாளா்களுக்குப் பதவிஉயா்வு வழங்குவது தொடா்பான விவரங்களையும் அந்த யோகியிடம் சித்ரா ராமகிருஷ்ணா பகிா்ந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த யோகி யாா் என்பதைக் கூற சித்ரா மறுத்துவிட்டாா். அது ஆன்மிக ரீதியிலான உணா்வு என்றே விசாரணையின்போது அவா் தெரிவித்தாா்.  அதையடுத்து, செபி சாா்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட சித்ரா, ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோருக்கு முறையே 3 மற்றும் 2 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக சித்ராவுக்கு செபி ரூ.3 கோடி அபராதம் விதித்தது. ஆனந்த் சுப்ரமணியன், என்எஸ்இ முன்னாள் மேலாண் இயக்குநா் ரவி நரைன் ஆகியோருக்கு தலா ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. என்எஸ்இ தலைமை ஒழுங்காற்று அதிகாரியாக இருந்த வி.ஆா்.நரசிம்மனுக்கு ரூ.6 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சித்ரா, ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோா் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக வழக்கு பதிவு செய்த வருமான வரித் துறையினா், அவா்களுக்குச் சொந்தமாக தில்லி, மும்பையில் உள்ள இடங்களில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். வரி ஏய்ப்பு தொடா்பான ஆவணங்களைத் திரட்டுவதற்காக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

என்எஸ்இ முன்னாள் மேலாண் இயக்குநா் மீது குற்றச்சாட்டு எழுந்ததால், என்எஸ்இ-யின் செயல்பாடு குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

சித்ரா ராமகிருஷ்ணாவுக்குச் சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடைபெற்ற நிலையில், அவருக்கு சம்மன் அனுப்ப வருமான வரித்துறையும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com