
உக்ரைனில் தவித்த 250 இந்தியர்களை மீட்கச் சென்ற இரண்டாவது விமானம் தில்லி வந்தடைந்தது.
உக்ரைனுக்கு எதிராக ரஷியா வியாழக்கிழமை போா் தொடுத்த நிலையில், உக்ரைன் வான் பகுதியில் பயணிகள் விமானப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுமாா் 16 ஆயிரம் இந்தியா்கள் உக்ரைனை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியில் இந்தியா மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்காக அண்டை நாடுகளான ருமேனியா, போலாந்து, ஹங்கேரி எல்லைகளுக்கு சாலை மாா்க்கமாக வரும் இந்தியா்களை மீட்க உதவி மையங்களை இந்திய தூதரகங்கள் அமைத்துள்ளன. இந்த நிலையில் ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட்டில் இருந்து 219 இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் நேற்றி இரவு மும்பை வந்தடைந்தது.
மும்பை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
தொடர்ந்து ருமேனியாவிலிருந்து நேற்று இரவு 5 தமிழர்கள் உள்பட 250 இந்தியர்களுடன் கிளம்பிய ஏர் இந்தியாவின் இரண்டாவது விமானம் நள்ளிரவு 3 மணியளவில் தில்லி வந்தடைந்தது.
தில்லி விமானம் நிலையத்திற்கு நேரில் சென்ற விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, வெளியுறவு இணையமைச்சர் முரளீதரன் ஆகியோர் இந்தியர்களை வரவேற்றார்.