
உக்ரைனில் போர்ச்சூழல் நிலவிவரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள மாணவர்களை மீட்க மத்திய அரசு சார்பில் டிவிட்டர் கணக்கு (சுட்டுரை) தொடங்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் உள்ளவர்களை மீட்கும் (ஆப்ரேஷன் கங்கா) திட்டத்தை எளிமையாக்கும் வகையிலும், அங்கு பல்வேறு பகுதிகளில் தங்கியுள்ளவர்களை எளிதில் கண்டறியும் வகையிலும் இந்த டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் ரஷியாவின் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைனில் இருந்து ஏராளமான மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
உக்ரைனிலுள்ள பலர் போலந்து, மால்டோவா, ஹங்கேரி, ருமேனியா மற்றும் சுலோவேக்கியா மற்றும் பெலாரஸில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதனிடையே உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக மால்டோவா, ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
படிக்க | அணு ஆயுத தடுப்புப் படைக்கு புதின் விடுத்த உத்தரவு... அச்சத்தில் உக்ரைன் மக்கள்
அதனைத் தொடர்ந்து உக்ரைனின் அண்டை நாடுகளான போலாந்து, ரோமானியா, ஹங்கேரி, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
24x7 Control Centres set up to assist in the evacuation of Indian nationals through the border crossing points with Hungary, Poland, Romania and Slovak Republic⬇️https://t.co/uMI1Wu5Jwd#OperationGanga pic.twitter.com/UXF1NVBFcr
— OpGanga Helpline (@opganga) February 27, 2022
இதுவரை உக்ரைனிலிருந்து 4 விமானங்கள் மூலம் 907 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். மேலும் கிழக்கு உக்ரைனில் அதிக அளவிலான இந்திய மாணவர்கள் இருப்பதால் அவர்களை ரஷிய எல்லை வழியாக கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்தியர்களைக் கண்டறிய உதவும் வகையில் மத்திய அரசு சார்பில் டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
படிக்க | ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புதல்
ஆப்ரேஷன் கங்கா ஹெல்ப்லைன் என்ற பெயரில் சுட்டுரையில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் இந்த டிவிட்டர் கணக்கு மூலம் அரசுக்கு தெரியப்படுத்தலாம். அல்லது இந்தியா வந்து சேர்ந்த மாணவர்கள் உக்ரைனிலுள்ள இந்திய மாணவர்கள் குறித்த தகவல்களை இதில் பதிவு செய்யலாம். இதனால் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை ஒருங்கிணைக்கும் பணிகள் துரிதமாக நடைபெறும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.