பிரதமருக்கு என்ன பாதுகாப்பு குறைபாடு இருந்தது? பஞ்சாப் முதல்வர் கேள்வி

பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு எந்தவிதமான பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது என அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி
முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி

பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு எந்தவிதமான பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது என அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்த நிலையில் சாலை வழியாக செல்லும்போது சிலர் மறியலில் ஈடுபட்டதால் பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் 15-20 நிமிடங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாலத்தில் நிறுத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திரமோடி நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு தில்லி திரும்பினார். இந்த சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஏற்கெனவே பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விளக்கமளித்துள்ள நிலையில் இன்று சனிக்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், “பிரதமர் இருந்த 1 கி.மீ. எல்லைக்குள் எந்த போராட்டக்காரர்களும் இல்லை. பிரதமரின் பாதுகாப்புக்காக 6000 பாதுகாப்புப் பணியாளர்களும், சிறப்புப் பாதுகாப்புப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பிரதமருக்கு என்ன ஆபத்து வந்திருக்கும் எனத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், “பஞ்சாபில் பிரதமருக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. அவர் முற்றிலும் பாதுகாப்பாக இருந்தார். யாரும் அவருக்கு அருகில் செல்லவில்லை. இதுதொடர்பாக நான் பிரியங்கா காந்தியுடன் உரையாடினேன்.நடந்த சம்பவத்தை விளக்கிக் கூறியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து பேசிய சரண்ஜித் சிங் சன்னி,  “தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புகளை வரவேற்கிறேன். இதுவரை, நாங்கள் வேலை செய்யும் அரசாக மட்டுமே இருந்தோம். இப்போது நாங்கள் தேர்தலைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவோம். 111 நாட்கள் முதல்வராக இருக்க என்னை தகுதியானவர் என்று கருதிய பஞ்சாப் மற்றும் காங்கிரஸ் மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com