நீதிமன்ற உத்தரவுகளை உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும்

தமிழக பொதுப்பணித் துறையில் பணிமூப்பு அதிகாரிகள் பட்டியலைத் திருத்தியமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்தாமல் இருந்ததாகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

புது தில்லி: தமிழக பொதுப்பணித் துறையில் பணிமூப்பு அதிகாரிகள் பட்டியலைத் திருத்தியமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்தாமல் இருந்ததாகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் புதன்கிழமை விசாரித்தது. அப்போது, வழக்கில் குற்றத்துக்கு தொடர்புடைய உயரதிகாரிகள் எதிர்காலத்தில் நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும் என்று எச்சரித்து வழக்கை முடித்துவைத்தது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பதவி உயர்வில் பணிமூப்பு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2016, ஜனவரி 16-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், பணிமூப்புப் பட்டியல் தேர்வு, தகுதிப் பட்டியல் அடிப்படையில் தயாரிக்க வேண்டும் என்றும், "ரோஸ்டர் பாயின்ட்' அடிப்படையில் இருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் ஒரு திருத்தியமைக்கப்பட்ட பணிமூப்புப் பட்டியலை வெளியிட்டதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் உயரதிகாரி எம்.விஜயகுமார் ஐஏஎஸ் உள்ளிட்டோருக்கு எதிராக வி.செந்தூர் உள்ளிட்டோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் 22.1.2016, 6.5.2016-இல் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. ஆனால், அந்த உத்தரவின்படி, மூன்று மாத காலத்தில் திருத்தியமைக்கப்பட்ட பணிமூப்பு பட்டியலை எதிர்மனுதாரர்கள் தயாரிக்கவில்லை. மேலும், நீதிமன்ற உத்தரவையும் பின்பற்றி செயல்படவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், "எதிர்மனுதாரர்கள் இந்த நீதிமன்றத்தின் மூலம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைப் பின்பற்றவும், ரோஸ்டர் பாயின்ட் அடிப்படையில் அல்லாமல், டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு அடிப்படையில் பணிமூப்பை நிர்ணயிக்கவும் கடமைப்பட்டவர்களாகின்றனர். இந்த நிலையில், உள்நோக்குடன் வெளியிடப்பட்ட பணிமூப்புப் பட்டியலானது, இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை முற்றிலும் மீறி இருப்பதாகக் கருதுகிறோம். ஆகவே,  11.2.2021-இல் உள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்ட எம். விஜயகுமார், எஸ்.தினகரன், டாக்டர் எஸ்.ஸ்வர்ணா, கே.ராமமூர்த்தி, கே.நந்தகுமார், கே.சண்முகம், டாக்டர் கே.மணிவாசன், எஸ்.கே. பிரபாகர், எஸ்.பக்தவத்சலம் ஆகியோர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அவமதித்த குற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், "எதிர்மனுதாரர்கள் டிஎன்பிஎஸ்சி-இன் 10.9.1999-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையை செயல்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட தேர்வு நடைமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பணிமூப்புப் பட்டியலை திருத்தி வெளியிட உத்தரவிடுகிறோம். தேர்வு நடைமுறையானது "ரோஸ்டர் பாயின்ட்' அடிப்படையில் இல்லாமல் தகுதியின் அடிப்படையில் இருக்க வேண்டும். இந்த நடவடிக்கையை இந்த உத்தரவு பிறப்பித்த 12 வார காலத்துக்குள் செயல்படுத்த வேண்டும். நீதிமன்ற அவமதிப்பாளர்களாகக் கூறப்பட்டுள்ள நபர்கள், அடுத்த ஆண்டு ஜனவரியில் விசாரணையின்போது உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என்றும் உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதிடுகையில், "இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அடுத்தடுத்து பிறப்பித்த உத்தரவை எதிர்மனுதாரர்களான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. மனுதாரர்கள் இதனால் 6 ஆண்டுகள் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். இதனால், உரிய தண்டனை அளிக்கப்படுவது அவசியமாகும். குறிப்பாக 5 அதிகாரிகளுக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை அளிக்கப்பட வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் என்.சுப்பிரமணியன், "இந்த விவகாரத்தில் ஒரு அதிகாரி மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை. மற்றொரு அதிகாரியின் பிரமாணப் பத்திரம் கிடைக்கப் பெறவில்லை. நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டினர்' என்றார்.
எதிர்மனுதாரர்களான குறிப்பிட்ட அதிகாரிகள் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் முகுல் ரோத்தகி, பி.வில்சன், சி.எஸ்.வைத்தியநாதன், வி.கிரி ஆகியோர் ஆஜராகி, "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்துவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியம் காட்டவில்லை. அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உள்நோக்கம் ஏதும் இல்லை. தனிப்பட்ட முறையில் செயல்பட நோக்கம் ஏதும் அவர்களுக்கு இல்லை. மேலும், அவர்கள் இந்த விவகாரத்தில் மன்னிப்பும் கோரியுள்ளனர். ஆகவே, நீதிமன்றம் அவர்களின் எதிர்காலப் பணியைக் கருத்தில் கொண்டு அவர்களின் மன்னிப்பை ஏற்று வழக்கை முடித்துவைக்க வேண்டும்' என்றனர்.
இதையடுத்து, நீதிபதிகள் காணொலி வாயிலாக ஆஜரான அதிகாரிகள் எஸ்.ஸ்வர்ணா, கே.ராமமூர்த்தி, கே.நந்தகுமார், கே.சண்முகம், டாக்டர் கே.மணிவாசன், எஸ்.கே. பிரபாகர் ஆகியோரிடம் விசாரித்தனர். அவர்கள் தங்களுக்கு நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் எண்ணமோ, செயல்படுத்துவதில் உள்நோக்கமோ இல்லை என்றும், மன்னிப்புக் கோருவதாகவும் கூறினர். இதையடுத்து, நீதிபதிகள் அமர்வு, "நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடுகின்றனர். அவர்கள் அலைக்கழிக்கப்படக் கூடாது. இதனால்,  எதிர்காலத்தில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் உடனுக்குடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட எதிர்மனுதாரர்களுக்கு எச்சரிக்கிறோம். நீதிமன்ற உத்தரவுகளை தாமதம் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்' என்று கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com