
ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படவுள்ள நிலையில், அதன் தலைவர் என். சந்திரசேகரன் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசின் சார்பாக நியமிக்கப்பட்ட இயக்குநர் குழு உறுப்பினர்கள் பதவி விலகி, அதற்கு பதில் டாடா சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம், அரசுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா, டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாலஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 18,000 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளை விற்க விருப்பம் தெரிவிக்கும் கடிதம் டாடா குழுமத்திற்கு அரசின் சார்பில் அனுப்பப்பட்டது.
பின்னர், பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையொப்பமிட்டது. ஒப்பந்தத்தின் ஓர் அங்கமாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் இந்தியா சாட்ஸ் நிறுவனத்தின் 50 சதவிகித பங்குகளும் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
முன்னதாக, நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்க 12,906 கோடி ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங்கின் கூட்டு நிறுவனம் 15,100 கோடி ரூபாய்க்கு வாங்க முன்வந்தது.
2003-04க்கு பிறகான காலக்கட்டத்தில் இது முதல் தனியார்மயமாக்கலாக இருக்கும். அதே வேளையில், ஏர் இந்தியா, டாடாஸ் நிறுவனத்தில் மூன்றாவது ஏர்லைன் பிராண்டாக இருக்கும். இதேபோல, ஏர் ஆசியா இந்தியா மற்றும் விஸ்டாரா நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் டாடா வசமே உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.