தூக்கிலிடப்படுவோமா? ஆயுள் சிறையா? உதய்பூர் கொலையாளிகள் கேள்வி

என்ஐஏ அதிகாரிகளிடம் நாங்கள் தூக்கிலிடப்படுவோமா? அல்லது ஆயுள் சிறையா? என்ற அடிப்படைக் கேள்வியையே எழுப்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூக்கிலிடப்படுவோமா? ஆயுள் சிறையா? உதய்பூர் கொலையாளிகள் கேள்வி
தூக்கிலிடப்படுவோமா? ஆயுள் சிறையா? உதய்பூர் கொலையாளிகள் கேள்வி

உதய்பூர் படுகொலையில் கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளும் நன்கு மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாகக் காணப்படுவதாகவும், தங்களிடம் விசாரணை நடத்தும் என்ஐஏ அதிகாரிகளிடம் நாங்கள் தூக்கிலிடப்படுவோமா? அல்லது ஆயுள் சிறையா? என்ற அடிப்படைக் கேள்வியையே எழுப்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கன்னையா லால் என்ற தையல்காரரை ரியாஸ் அக்தரி, கௌஸ் முகமது ஆகிய இருவரும் கடந்த வாரம் கழுத்தை அறுத்துக் கொலை செய்தக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் உள்ளனர்.

கடந்த வாரம் உதய்பூரின் தன்மண்டி பகுதியில் உள்ள அவரின் கடைக்கு ரியாஸ் அக்தரி, கெளஸ் முகமது ஆகிய இருவா் சென்று, கன்னையா லாலை கழுத்தறுத்து கொலை செய்தனா். அந்தக் கொலையை காணொலியாகப் பதிவு செய்து இருவரும் சமூக ஊடகத்தில் வெளியிட்டனா்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து ரியாஸ் அக்தரி, கெளஸ் முகமது உள்பட 5 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இஸ்லாத்தை இழிவுபடுத்தியதற்காக பழிதீா்த்ததாகக் கூறிய அவா்கள், பிரதமா் மோடிக்கும் மிரட்டல் விடுத்தனா். பாஜக செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மாவின் பெயரையும் அவா்கள் மறைமுகமாகக் குறிப்பிட்டனா்.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் கைது செய்தனா். கைதான இருவரும் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா். பின்னா், இந்த வழக்கு தேசியப் புலனாய்வு அமைப்பின்(என்ஐஏ) விசாரணைக்கு மாற்றப்பட்டது. ரியாஸ் அக்தரி உள்ளூா் பாஜக தலைவா்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியானதால் சர்ச்சை வெடித்தது.

கன்னையா லாலின் கொலையை பயங்கரவாத சம்பவமாகக் கருதி, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்ட நிலையில், ராஜஸ்தான் காவல் துறையின் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு உதவியுடன் அந்த அமைப்பு விசாரணையைத் தொடங்கியது.

இந்நிலையில், மாநில காவல் துறை கூடுதல் டிஜிபி அசோக் ரத்தோா் கூறுகையில், ‘‘கன்னையா லால் கொலையில் கூட்டுச் சதியில் ஈடுபட்டு, அவரை நோட்டமிட்டு வந்த இருவா் கடந்த வாரம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்திருந்தார்.

என்ஐஏ நடத்தி வரும் விசாரணையில், கன்னையா லால் கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு, இவ்விருவரும் கொலைத் திட்டத்தை தீட்டியுள்ளனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி, ரியாஸ் அக்தரியால் பட்டறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இருவருமே சூஃபி பரேல்வி முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com