
ரயில் பயணம் இன்று பலருக்கும் விருப்பமானது, பாதுகாப்பானது என்பதைத் தாண்டி 'பட்ஜெட்' பயணமாக இருக்கிறது. அதிலும், அரசுப் பேருந்து கட்டணங்களைவிடவும் ரயில் கட்டணங்கள் குறைவாக இருப்பதால் நெடுந்தொலைவு செல்லும் நடுத்தர, ஏழை, எளிய மக்கள் பெரும்பாலும் ரயில்களை நம்பியே இருக்கின்றனர்.
கட்டணத்துடன் பயண நேரமும் குறைவு என்பதால் மக்கள் அதிகளவில் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், பயணிகள் மற்றும் சாதாரண ரயில்களை 'எக்ஸ்பிரஸ்' ரயில்களாக மாற்றி, மூத்த குடிமக்கள் கட்டணச் சலுகைகள் உள்பட பல்வேறு சலுகைகளை யும் ரத்து செய்துவிட்ட நிலையில் இன்னும் சில மாதங்களிலேயே, பயணிகளுக்கு இன்னோர் அதிர்ச்சியை அளிக்கத் திட்டமிட்டிருக்கிறது ரயில்வே துறை!
ரயில்வேயின் புதிய திட்டத்தின்படி, தொலைதூர ரயில்களில் இனி 'ஏசி அல்லாத' ஸ்லீப்பர் பெட்டிகள் இரண்டு மட்டுமே இணைக்கப்படும், மற்ற எல்லா பெட்டிகளும் ஏ.சி. பெட்டிகள்தான்!
இந்தப் புதிய திட்டம், தெற்கு ரயில்வேயில், எல்.எச்.பி. (LHB) பெட்டிகளைக் கொண்ட, எக்ஸ்பிரஸ் ரயில்களான பாண்டியன், முத்துநகர், மலைக்கோட்டை, சோழன், பொதிகை மற்றும் நீலகிரி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது, ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளுக்குப் பதிலாக ஏசி - 3 டயர் பெட்டிகளை தெற்கு ரயில்வே இணைக்கப் போகிறது.
(Linke Hofmann Busch (LHB) பெட்டிகள் ஜெர்மனி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு பெரும்பாலும் இந்தியாவின் கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன).
இந்த மாற்றத்தினால் இந்த ரயில்கள் அனைத்திலும் ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகள் இரண்டு மட்டுமே இருக்கும். மேலும், இதனால் பயணிகள் அனைவரும் வேறு வழியில்லாமல் ஏ.சி. பெட்டிகளிலேயே பயணம் செய்ய வேண்டியிருக்கும். இதனால், கட்டணங்கள் கடுமையாக அதிகரிக்கும்.
உதாரணமாக, சென்னை - மதுரைக்கு ஸ்லீப்பர் வகுப்பு இருக்கையைவிட ஏசி - 3 டயர் வகுப்பு இருக்கையின் கட்டணம் ரூ. 500 அதிகம். ஸ்லீப்பர் கட்டணம் ரூ. 325, ஏசி 3ஏ வகுப்பு கட்டணம் - ரூ. 835.
கடந்த ஜூன் 6 ஆம் தேதி தெற்கு ரயில்வே மற்றும் பிற மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் இதுகுறித்த உத்தரவை வழங்கியுள்ளது. ஸ்லீப்பர் பெட்டிகளை, ஏசி (டயர் 1, டயர் 2, டயர் 3) பெட்டிகளாக மாற்றக் கோரியுள்ளது.
இதன்படி, தொலைதூர ரயில்களில் ஏசி - 3 டயர் பெட்டிகள் 10 ஆகவும், ஏசி - 2 டயர் பெட்டிகள் 4 ஆகவும், ஏசி - 1 டயர் பெட்டி ஒன்றாகவும், முன்பதிவில்லா பெட்டிகள்- 3 ஸ்லீப்பர் பெட்டிகள் - 2 ஆகவும் இருக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பாா்ட்டிகேட்டும் பதவி விலகலும் - போரிஸ் ஜான்சன் வீழ்ந்த கதை!
எல்.எச்.பி. பெட்டிகளைக் கொண்ட ரயில்களின் தற்போதைய நிலை: ஸ்லீப்பர் - 7, ஏசி 3 டயர் - 6 , ஏசி 2 டயர் - 2 , முன்பதிவில்லா பெட்டிகள் - 5.
புதிய திட்டத்தில் இருந்து விதிவிலக்கு பெற விரும்பும் ரயில்களுக்கு, மண்டல ரயில்வேயிடம் விரிவான விளக்கத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்களின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வேகம் தற்போது மணிக்கு 110 கி.மீ. ஆனால், புதிய திட்டப்படி முழுவதும் ஏ.சி. ரயிலாக பெட்டிகள் மாற்றப்பட்டுவிட்டால், குறிப்பிட்ட ரயில்கள் 130 கிமீ வேகத்தில் இயக்கப்படும்.
எல்.எச்.பி. ஸ்லீப்பரின் ஒரு பெட்டியில் 80 பயணிகள் (படுக்கைகளில்) பயணம் செய்யலாம். இந்த முறையில் மாற்றம் ஏற்பட்டால் ஸ்லீப்பர் இருக்கைகளின் எண்ணிக்கை 560 லிருந்து 160 ஆகக் குறையும்.
முன்னதாக மேற்குறிப்பிட்ட ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கை 10 (720 இருக்கைகள்) ஆக இருந்தது, எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றியபிறகு தற்போது 7 பெட்டிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தெற்கு ரயில்வே போக்குவரத்துக் கிளையின் (பயிற்சி) உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த முறையை நடைமுறைப்படுத்த இதுவரை எந்த ரயிலும் தேர்வு செய்யப்படவில்லை என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ள ரயில்களில் சில மாதங்களில் இந்த மாற்றம் கொண்டு வரப்படலாம் என்றும் தெரிவித்தார்.
தங்க நாற்கர பாதை (தில்லி-மும்பை-கொல்கத்தா-சென்னை) மற்றும் அதன் இணைவழிகளை உள்ளடக்கிய ரயில்களின் வேகத்தை மணிக்கு 130 கிமீ வேகத்தில் அதிகரிக்க 2018 ஆம் ஆண்டில் ரயில்வே முன்மொழிந்தது. அதன்பின்னர் தனியார் நிறுவனங்கள் இவற்றை இயக்க ரயில்வே முடிவு செய்தபிறகு தண்டவாளங்களை மேம்படுத்தும் பணி வேகம் பெற்றுள்ளது.
அந்தவகையில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஐ.சி.எப்.பின் பெட்டிகள் பயன்படுத்தப்படும்போது 12-13 ஸ்லீப்பர் பெட்டிகள்( 864-936 இருக்கைகள்) இருந்தன. ஆனால், அவை எல்.ஹெச்.பி. பெட்டிகளாக மாற்றப்பட்டதும் பாண்டியன், சோழன், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்களில் 7 பெட்டிகளாகவும் (ஸ்லீப்பர் இருக்கைகள் 546 ஆகவும்) முத்துநகர், பொதிகை, நீலகிரி, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் 10 பெட்டிகளாகவும் (இருக்கைகள் 780 ஆகவும்) குறைக்கப்பட்டன.
இதுபோன்ற நடவடிக்கைகள் ரயில் போக்குவரத்தை படிப்படியாக விமான சேவை போன்ற உயர்தர சேவையாக மாற்றுவதாக நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்கத்தின் செயலாளர் ஜி. அரவிந்த் குமார் கூறினார்.
'கட்டணத்தை உயர்த்தவில்லை என்று ரயில்வே கூறுகிறது, ஆனால் பயணிகள் ரயிலை எக்ஸ்பிரஸ் சேவையாக மாற்றிய பிறகு நாகப்பட்டினத்திலிருந்து திருச்சிக்குச் செல்வதற்கான டிக்கெட் விலை 30 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக அதிகரித்துள்ளது.
நாகப்பட்டினத்திலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள சிக்கல் பகுதிக்குச் செல்ல குறைந்தபட்ச கட்டணம் ரூ. 10 ஆக இருந்த நிலையில் இப்போது. ரூ. 30 ஆக உயர்ந்துள்ளது.
நாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு ஸ்லீப்பர் வகுப்பு கட்டணம் ரூ. 225. ஏசி 3 டயர் வகுப்புக்கு தற்போது மூன்று மடங்கு (ரூ. 650) செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்' என்று கூறினார்.
ஏசி 3 -டயர் பெட்டிகளை இயக்குவதால் மூலம் மட்டுமே ரயில்வே லாபம் ஈட்டுவதாக கடந்த 2019 ஆம் ஆண்டு சிஏஜி அறிக்கை மற்றும் கடந்த காலங்களில் ரயில்வேயால் அமைக்கப்பட்ட குழுக்கள் உள்பட பிற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலமாக, ரயில்வே துறையின் லாபத்தை அதிகரிக்க இந்த நடைமுறை விரைவில் கொண்டு வரப்படலாம் என்றே தோன்றுகிறது.
சென்னை கோட்ட ரயில்வே பயனாளர்களின் ஆலோசனைக் குழு உறுப்பினர் நைனா மாசிலாமணி கூறுகையில், சேவைத் துறையாக இருக்கும் ரயில்வேயை வணிக நிறுவனமாக மாற்றுவது தவறான எண்ணம். வேண்டுமெனில், பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களைத் தொடர்ந்து, புறநகர் ரயில்களுக்கான கட்டணத்தை உயர்த்தலாம்.
ரயில்வே நிலத்தை குத்தகைக்கு விடுவதன் மூலம் வருவாயை அதிகரிக்கும் திட்டங்களுக்கு என்ன நடந்தது?' என்று கேள்வி எழுப்பினார்.
அதுபோல மற்றொரு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒரு சில பிரிவுகளில் தேவைக்கு ஏற்ப பெட்டிகள் மாற்றியமைக்கப்பட்டு ஏசி மூன்றடுக்கு பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது' என்றார்.
முதலில் குறிப்பிட்ட ரயில்களில் இந்த திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. எனினும், மேற்குறிப்பிட்ட ரயில்கள் அனைத்துமே மக்களின் அடிக்கடிப் பயன்பாட்டில் இருப்பவை என்பதால் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர்.
இதையும் படிக்க | பாம்பு கடித்து இத்தனை பேர் சாவார்களா? மருந்தில்லா சிக்கல்!
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...