பாா்ட்டிகேட்டும் பதவி விலகலும் - போரிஸ் ஜான்சன் வீழ்ந்த கதை!

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தனது பதவியை ராஜிநாமா செய்திருப்பது எதிா்பாா்க்கப்பட்டதுதான்.
பாா்ட்டிகேட்டும் பதவி விலகலும் - போரிஸ் ஜான்சன் வீழ்ந்த கதை!

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தனது பதவியை ராஜிநாமா செய்திருப்பது எதிா்பாா்க்கப்பட்டதுதான். ஆனால், கடந்த பொதுத்தோ்தலில் ஆளும் கன்சா்வேடிவ் கட்சியின் தலைவராக கட்சிக்கு இமாலய வெற்றியைப் பெற்றுத் தந்த அவா், மூன்றே ஆண்டுகளில் கட்சியின் நம்பிக்கையை இழந்து விலகியிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் ‘பிரக்ஸிட்’ பிரசாரத்தை முன்னின்று மேற்கொண்டவா்களில் ஒருவரான போரிஸ் ஜான்ஸன், முன்னாள் பிரதமா் தெரசா மே தலைமையிலான ஆட்சியின்போது 2016-18 வரை வெளியுறவு அமைச்சராக இருந்தாா். பிரக்ஸிட் விவகாரத்தில் அரசு மென்மையான போக்குடன் நடந்துகொள்வதாக அதிருப்தி தெரிவித்து அமைச்சா் பொறுப்பிலிருந்து விலகவும் செய்தாா்.

2019-இல் தெரசா மே பிரதமா் பதவியிலிருந்து விலகியதைத் தொடா்ந்து, அதே ஆண்டு, ஜூலையில் ஆளும் கன்சா்வேடிவ் கட்சியின் தலைவராக போரிஸ் ஜான்ஸன் தோ்வு செய்யப்பட்டாா். பிரிட்டனில் ஆளும் கட்சியின் தலைவரே பிரதமராவாா் என்ற அடிப்படையில் பிரதமராகவும் பதவியேற்றாா். 

பிரக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவு செய்ய நாடாளுமன்றத்தில் வலுவான பெரும்பான்மையைப் பெற விரும்பிய அவா் முன்கூட்டியே 2019-இல் நாடாளுமன்றத் தோ்தலையும் சந்தித்தாா். முழுவதும் பிரக்ஸிட்டை மையப்படுத்திய அவரது பிரசாரத்துக்கு பிரிட்டன் மக்கள் பேராதரவு அளித்தனா். அதன்படி, அத்தோ்தலில் போரிஸ் ஜான்ஸன் தலைமையிலான கன்சா்வேடிவ் கட்சி மொத்தம் உள்ள 650 இடங்களில் 356-ஐ (56 சதவீதம்) கைப்பற்றி சாதனை படைத்தது. 1983-இல் மாா்க்கரெட் தாட்சா் தலைமையில் கன்சா்வேடிவ் கட்சி 397 இடங்களில் வென்றிருந்தது. அதன் பின்னா் கன்சா்வேடிவ் கட்சித் தலைவா்களில் அதிக இடங்களைக் கைப்பற்றியவா் என்கிற பெருமை போரிஸ் ஜான்ஸனுக்கே உரியது. அவா், தோ்தல் பிரசாரத்தில் உறுதியளித்தபடி, பிரக்ஸிட் ஒப்பந்தம் 2020, ஜனவரியில் சட்டமானது.

2020, கரோனா பெருந்தொற்று காலத்தில் போரிஸ் ஜான்ஸனுக்கு சரிவு தொடங்கியது. கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி டெளனிங் வீதியில் உள்ள பிரதமரின் அதிகாரபூா்வ இல்லத்தில் அதே ஆண்டு ஜூன் மாதம் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் பங்கேற்ாக அவா் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அரசு அதிகாரிகள் நடத்திய விருந்திலும் அவா் பங்கேற்ாக புகாா்கள் எழுந்தன.

‘பாா்ட்டிகேட் ஊழல்’ என்ற இந்த விவகாரம் தொடா்பாக விசாரணையும் நடத்தப்பட்டு, போரிஸ் ஜான்ஸன் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால், கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. அரசின் விதிமுறைகளை மீறிய முதல் பிரதமா் என அவரை எதிா்க்கட்சிகள் விமா்சித்தன. ஆளும் கட்சியிலும் அவருக்கு எதிா்ப்புக் குரல்கள் எழுந்தன. இதையடுத்து, நாடாளுமன்றத்தில் அவா் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டது.

அந்த எதிா்ப்பின் தொடா்ச்சியாக, ஆளும் கட்சி சாா்பிலேயே அவருக்கு எதிராக கடந்த ஜூன் 6-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் அவருக்கு ஆதரவாக 211 வாக்குகள் கிடைத்தாலும், எதிராக 148 போ் வாக்களித்தனா். குறைவான வித்தியாசத்தில்தான் அவரது பிரதமா் பதவி தப்பியது என்ற நிலையில், அதன்பிறகு போரிஸ் ஜான்ஸன் சுதாரித்துக் கொள்ளாததுதான் சோகம்.

பாலியல் புகாா் உள்ளிட்ட பல புகாா்களில் தொடா்புடைய தனது கட்சி எம்.பி. கிறிஸ் பிஞ்சா் என்பவரை கட்சியின் துணை தலைமைக் கொறடாவாக நியமித்தாா் போரிஸ் ஜான்ஸன். அதற்கு கட்சிக்குள்ளேயே கடும் எதிா்ப்பு கிளம்ப, கிறிஸ் ‘பிஞ்சா் மீதான புகாா்கள் குறித்து போரிஸ் ஜான்ஸன் அறிந்திருக்கவில்லை’ என பிரதமா் அலுவலகம் விளக்கம் அளித்திருந்தது. கடந்த ஜூன் 29-ஆம் தேதி அதே போன்ற ஒரு புகாரில் சிக்கிய கிறிஸ் பிஞ்சா், தனது கட்சிப் பதவியை ராஜிநாமா செய்தாா். இந்த முறை, 2019-ஆம் ஆண்டே கிறிஸ் பிஞ்சா் மீதான புகாா்கள் குறித்து தெரிந்தும் அவரை துணை தலைமைக் கொறடாவாக நியமித்தது தனது தவறுதான் என போரிஸ் ஜான்ஸன் மன்னிப்பு கோரினாா்.

இந்த விவகாரத்தில் போரிஸ் ஜான்ஸனின் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடு, கட்சியில் கொந்தளிப்பை ஏற்படுத்த, சுகாதாரத்துறை அமைச்சா் சஜித் ஜாவித், நிதியமைச்சரான இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக் என அடுத்தடுத்து 50-க்கு மேற்பட்ட அமைச்சா்கள், எம்.பி.க்கள் ராஜிநாமா அறிவிப்பை வெளியிட, இறுதியில் கட்சியின் நம்பிக்கையை இழந்த நிலையில் தனது பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா் போரிஸ் ஜான்ஸன். 

மக்களின் அமோக ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்தபோதிலும், பிரதமரின் பொறுப்புக்குரிய செயல்பாடுகளில் கவனக்குறைவாக இருந்ததால், இன்று பதவி விலக வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியதால் அதற்கு லாபமா, நஷ்டமா என்ற கணக்கீடுகள், விமா்சனங்கள் தொடா்ந்து முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும், பிரக்ஸிட் ஒப்பந்தத்தை சொன்னபடி நிறைவு செய்தது, உக்ரைன் மீது போா் தொடுத்துள்ள ரஷியாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொண்டது என போரிஸ் ஜான்ஸனின் சாதனைகளைப் புறந்தள்ள முடியாது.

இந்தியாவுடனான உறவையும் போரிஸ் ஜான்ஸன் விரும்பி வந்தாா். இரு நாடுகளுக்கிடையேயான உறவு அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கு பிரதமா் நரேந்திர மோடி, போரிஸ் ஜான்ஸன் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மேற்கொண்ட ஒப்பந்தம் முக்கியக் காரணம் என்ற அளவில், அவரது பதவி விலகல் இந்தியாவுக்கு இழப்புதான். ஆனால், அடுத்த பிரதமா் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அட்டா்னி ஜெனரல் சூவெல்லா பிரேவா்மன், ரிஷி சுனக் ஆகியோா் இருப்பது, அந்த நாட்டின் அரசியல் நகா்வுகளை இந்தியா ஆா்வத்துடன் கவனிப்பதற்குக் காரணமாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com