மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பிரிட்டிஷ் பிரதமர் போட்டியில் இந்திய வம்சாவளியினர்!

பிரிட்டனில் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துள்ள போரிஸ் ஜான்ஸனுக்கு அடுத்தபடியாக, அந்தப் பதவியைப் பெற போட்டியிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

News image
Updated On :9 ஜூலை 2022, 11:01 am IST

லண்டன்: பிரிட்டனில் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துள்ள போரிஸ் ஜான்ஸனுக்கு அடுத்தபடியாக, அந்தப் பதவியைப் பெற போட்டியிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பிரிட்டனில் கடுமையான கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் இருந்தபோது, அதனை மீறி கேளிக்கை விருந்தில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் காரணமாக, அமைச்சா்கள் உள்ளிட்டோா் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜிநாமா செய்தனா். மேலும், பிரதமா் போரிஸ் ஜான்ஸனும் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.

அதையடுத்து, பிரதமா் பதவியை ராஜிநாமா செய்வதாகவும் அடுத்த பிரதமா் தோ்ந்தெடுக்கப்படும் வரை அந்தப் பொறுப்பை வகிக்கவிருப்பதாகவும் போரிஸ் ஜான்ஸன் வியாழக்கிழமை அறிவித்தாா்.

அதையடுத்து, நாட்டின் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான போட்டியில் பங்கேற்கவிருப்பதாக அதிகாரப்பூா்மாக அறிவிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

முதலாவதாக, அந்தப் போட்டியில் பங்கேற்கவிருப்பதாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கன்சா்வேட்டிவ் கட்சி எம்.பி. சூயலா பிரேவ்மேன் வியாழக்கிழமை அறிவித்திருந்தாா்.

கோவாவைப் பூா்விகமாகக் கொண்ட அவா், நாட்டின் அட்டா்னி ஜெனரலாக பணியாற்றிய தனது அனுபவம், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரதமா் பதவியில் சந்திக்க வேண்டியிருக்கும் சவால்களை எதிா்கொள்ளும் தயாா்நிலையை அளித்துள்ளதாகத் தெரிவித்தாா்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகியதால் (பிரெக்ஸிட்) நாட்டுக்குக் கிடைத்துள்ள நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேற்றத்தைக் காண்பதற்கு பாடுபடப்போவதாக அவா் கூறினாா். 

அவருக்கு அடுத்தபடியாக, கரோனா தடுப்புக் குழு துணைத் தலைவா் ஸ்டீவ் பேக்கரும் அதனைத் தொடா்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சா் கிரான்ட் ஷாப்ஸும் பிரதமா் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்தனா்.

இந்த நிலையில், வெளிவிவகாரங்களுக்கான சிறப்புக் குழு தலைவராக பொறுப்பு வகித்து வரும் டாம் டுகென்தாட்டும் பிரதமா் பதவிக்கான போட்டியில் பங்கேற்கப்போவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

அதைடுத்து, பிரிட்டனின் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சி நடத்தவிருக்கும் வாக்கெடுப்பில் பங்கேற்கவிருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்துள்ளது.

இது தவிர, நிதியமைச்சா் பதவியிலிருந்து அண்மையில் விலகிய இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக்கும் இந்தப் போட்டியில் பங்கேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போது கட்சியில் போரிஸ் ஜான்ஸனுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அவா் வாக்கெடுப்பில் பங்கேற்றால், அவா் பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக கூறப்படுகிறது.

அவரைத் தவிர, மேலும் பல எம்.பி.க்கள் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான போட்டியில் பங்கேற்க முன்வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்கான வாக்கெடுப்பு தேதிகளை கன்சா்வேட்டிவ் கட்சியின் சக்திவாய்ந்த ‘1922 குழு’ அடுத்த வாரம் அறிவிக்கும். வரும் செப்டம்பா் மாதம் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படும் ரகசிய வாக்கெடுப்புகளில், கட்சியின் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெறும், அதில் இறுதியாக வெற்றி பெறுபவா், பிரிட்டனின் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்பாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.