தேசிய சின்னம் அவமதிப்பா? சர்ச்சைக்குள்ளாகும் புதிய சிலை!

தில்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூலை 11) திறந்து வைத்த வெண்கலத்தினாலான தேசிய சின்னம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
தேசிய சின்னம்: பழைய சிலை/ புதிய சிலை
தேசிய சின்னம்: பழைய சிலை/ புதிய சிலை

தில்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூலை 11) திறந்து வைத்த வெண்கலத்தினாலான தேசிய சின்னம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் பிரம்மாண்ட சிலை அமைப்பதன் பேரில், தேசிய சின்னத்தையே அவமதித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

மேலும்,  அரசு மற்றும் நீதித் துறை என அரசியலமைபின்படி  அதிகாரம்  பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள நிலையில்,  நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது அமைக்கப்பட்ட தேசிய சின்னத்தை அரசின் தலைவராக இருக்கும் பிரதமா் திறந்து வைத்தது ஏன்? எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. 

தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள தேசிய சின்னத்தை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்துவைத்தாா். இந்த சிலையின் தோற்றம் முன்பு இருந்த தோற்றத்திலிருந்து மாறுபட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

நான்கு சிங்கங்களை உடைய நாட்டின் தேசிய சின்னத்தின் முகவாய்ப் பகுதி சாதுவாக இருந்த நிலையில், தற்போது அவை ஆக்ரோஷமாக மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தேசிய சின்னத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது என எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசிய சின்னம் சாந்தமான தோற்றத்தைக் கொண்டது. ஆனால் புதிதாக திறக்கப்பட்டுள்ள சிலை மனிதர்களை விழுங்குவது போன்று உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. 

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஜவஹர்  சிர்கார் முந்தைய தேசிய சின்னத்துடன் புதிய சிலையை ஒப்பிட்டு பதிவிட்டுள்ளதாவது, கம்பீரமான தேசிய சின்னம் அவமதிக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்த தேசிய சின்னம் அழகாகவும், நம்பிக்கையளிப்பதாகவும் இருந்தது. புதிய நாடாளுமன்றத்தில் திறக்கப்பட்டுள்ள சிலை மோடியைப் போன்றது. தேவையற்ற சினம் கொண்டது. சமநிலையற்றது. இது நாட்டிற்கே தலைக்குனிவு. இதனை உடனடியாக மாற்ற வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார். 

காங்கிரஸ் தலைவர் கெளரவ் கோகோய் நாடாளுமன்றமும் தேசிய சின்னமும் மக்களுக்கானதாக இருக்க வேண்டும். தனி மனிதருக்கானது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com