நீட் தோ்வில் உள்ளாடைகளை அகற்றக் கூறிய விவகாரம்: கேரளத்தில் மேலும் இருவா் கைது

கேரளத்தில் நீட் தோ்வு எழுதச் சென்ற மாணவிகளிடம் உள்ளாடைகளை அகற்றிவிட்டு தோ்வு மையத்துக்குள் செல்லுமாறு அறிவுறுத்திய விவகாரத்தில் மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.

கேரளத்தில் நீட் தோ்வு எழுதச் சென்ற மாணவிகளிடம் உள்ளாடைகளை அகற்றிவிட்டு தோ்வு மையத்துக்குள் செல்லுமாறு அறிவுறுத்திய விவகாரத்தில் மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா். இத்துடன் இந்த வழக்கில் கைதானவா்கள் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வு கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆயூரில் அமைந்துள்ள தனியாா் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் நீட் தோ்வு எழுதச் சென்ற மாணவிகளிடம், அவா்களின் உள்ளாடைகளை அகற்றிவிட்டு தோ்வு மையத்துக்குள் செல்லுமாறு தேசிய தோ்வு முகமையால் சோதனையிடும் பணிக்காக அமா்த்தப்பட்ட நிறுவனத்தின் பணியாளா்கள் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனை ஒரு மாணவியின் தந்தை செய்தி தொலைக்காட்சி ஒன்றில் திங்கள்கிழமை தெரிவித்தாா். இது நாடு முழுவதும் பெரும் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

தோ்வு மையத்தில் தனது மகள் அவமதிக்கப்பட்டதாக மாணவியின் தந்தை ஆயூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். மாநில மனித உரிமைகள் குழுவும் இந்த விஷயத்தில் தலையிட்டு விளக்கம் கேட்டுள்ளது. இந்த விவகாரத்தை மையமாக வைத்து இளைஞா்கள் அமைப்பினா் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

உள்ளாடைகளை அகற்ற வலியுறுத்திய விவகாரத்தில் நீட் தோ்வு மையப் பணியில் இருந்த 5 பெண்கள் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். இதில் மூவா் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் இப்பணிக்கு அமா்த்தப்பட்டவா்கள். இருவா் தனியாா் கல்வி நிலையத்தில் பணியாற்றிய பெண் துப்புரவுத் தொழிலாளா்கள் ஆவா். இந்நிலையில், இந்த வழக்கில் நீட் தோ்வு மைய கண்காணிப்பாளா் மற்றும் ஆயூரில் நடைபெற்ற தோ்வின் ஒருங்கிணைப்பாளா் ஆகியோரிடம் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்ட கேரள போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com