திரெளபதி முர்மு குடியரசுத் தலைவராக பதவியேற்றதை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர் மதுபோதையில் வந்து பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திரெளபதி முர்மு குடியரசுத் தலைவராக பதவியேற்றதை கொண்டாடும் வகையில் குஜராத் மாநிலம் சோட்டாடேபூர் பகுதியில், பாஜக சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பாஜக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் ரஷ்மிகாந்த் வாசவா மது அருந்திவிட்டு பங்கேற்றுள்ளார். அவர் பெண்களுக்கு மத்தியில் தள்ளாடியபடி வந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில், பாஜக மாவட்ட மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் உள்பட பலர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அப்போது மாவட்ட தலைவர் பொறுப்பில் உள்ள வாசவாவும் மது அருந்திவிட்டு தள்ளாடியபடி நடந்து வந்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல், தள்ளாடியபடியே மேடைக்கு வந்த அவர், நாற்காலியில் அமர்ந்தவாறே உறங்கியுள்ளார். இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அதிருப்தி அடைந்தனர். குடியரசுத் தலைவர் பொறுப்பேற்றதைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது நிகழ்ச்சியில், பாஜக மாவட்டத் தலைவர் மது அருந்திவிட்டு வந்த விடியோ இணையத்தில் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.