
காந்தி குடும்பத்தின் சொத்துகளைப் பாதுகாக்கும் முயற்சியே இன்றைய காங்கிரஸ் பேரணி என பாஜக எம்.பி. ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் பணமோசடி தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, தில்லி அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி இன்று ஆஜராகியுள்ளார். 2 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதுமுள்ள காங்கிரஸ் கட்சியினர் இன்று பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான ஸ்மிருதி இரானி காங்கிரஸின் பேரணி குறித்து விமர்சித்துள்ளார்.
'தங்கள் ஊழல் அம்பலமாகிவிட்டதால், புலனாய்வு அமைப்புக்கு அழுத்தம் கொடுப்பதற்காக காங்கிரஸ் தலைவர்கள் இன்று வீதிகளில் இறங்கியுள்ளனர். காந்தியின் சொத்துகளை பாதுகாக்கும் முயற்சியே இது.
இப்போது ரியல் எஸ்டேட் தொழிலை நடத்தி வரும் முன்னாள் செய்தித்தாள் வெளியீட்டு நிறுவனத்தில் காந்தி குடும்பத்தினர் ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள்? ராபர்ட் வதேரா மட்டுமல்ல, ஒட்டுமொத்த காந்தி குடும்பமும் ரியல் ஸ்டேட்டில் ஈர்க்கப்பட்டுள்ளது என்பதை இது காட்டுகிறது' என்று விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிக்க | நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறை முன் ராகுல் காந்தி ஆஜர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.