குடியரசுத் தலைவர் தேர்தலில் மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்படாதது ஏன்?

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (இவிஎம்) குடியரசுத் தலைவர் தேர்தலில் பயன்படுத்தப்படுவதில்லை. மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல் முறைக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் முறைக்கும் உள்ள வித்தியாசமே அதற்கு முக
குடியரசுத் தலைவர் தேர்தலில் மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்படாதது ஏன்?

கடந்த 2004-ஆம் ஆண்டில் இருந்து 4 மக்களவைத் தேர்தல்களிலும், 127 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (இவிஎம்) குடியரசுத் தலைவர் தேர்தலில் பயன்படுத்தப்படுவதில்லை. மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல் முறைக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் முறைக்கும் உள்ள வித்தியாசமே அதற்கு முக்கியக் காரணம்.

வழக்கமாக மக்களவைத் தேர்தலிலும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தொகுதிகள் அடிப்படையில் முறையே எம்.பி.க்களும், எம்எல்ஏ-க்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்கள் சம்பந்தப்பட்ட தொகுதி மக்களின் பிரதிநிதியாகச் செயல்படுகின்றனர். தேர்தலின்போது குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அகரவரிசைப்படி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் அச்சிடப்பட்டிருக்கும். அதற்கு நேரே அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் இடம்பெற்றிருக்கும். 

வாக்காளர் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறாரோ, அவரது பெயருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள சின்னத்துக்கும் நேரே உள்ள பொத்தானை அழுத்தினால் வாக்கு பதிவாகிவிடும். 

இவ்வாறு குறிப்பிட்ட தொகுதியில் வாக்காளர்கள் யாருக்குப் பெரும்பாலான எண்ணிக்கையில் வாக்களிக்கின்றனரோ, அந்த வேட்பாளரே வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார். 

ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர்கள் செலுத்தும் வாக்குகளை மொத்தமாகக் கூட்டி, யார் எவ்வளவு வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பதைக் கணக்கிட்டுக் கூறுவதே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடு.

குடியரசுத் தலைவர் தேர்தல் முறை: மக்களவை, பேரவைத் தேர்தல் முறைகளைப் போல அல்லாமல், குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னுரிமையின் அடிப்படையில் வாக்குகள் செலுத்தப்படுகின்றன. அத்தேர்தலில் மக்கள் நேரடியாகப் பங்கேற்காமல், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்காளர்களாகப் பங்கேற்கின்றனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கு முதல் முன்னுரிமை, யாருக்கு 2-ஆவது முன்னுரிமை என்பதை வாக்காளர்கள் பதிவு செய்ய வேண்டும். எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனரோ, அத்தனை பேருக்கும் வாக்காளர்கள் முன்னுரிமை அடிப்படையில் எண்களைக் குறிப்பிட வேண்டும். 

எம்.பி.க்களுக்கும், எம்எல்ஏ-க்களுக்கும் உள்ள வாக்கு மதிப்பின் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதில், ஒட்டுமொத்தமாக எந்த வேட்பாளருக்கு 51 சதவீதத்துக்கு அதிகமான முதல் முன்னுரிமை வாக்குகள் (வாக்கு மதிப்பு) கிடைக்கிறதோ, அவரே குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். 

முதல் சுற்று முடிவில் எந்த வேட்பாளரும் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை எனில், குறைவான வாக்குகள் பெற்ற வேட்பாளரின் பெயர் நீக்கப்பட்டு, அவர் பெற்ற வாக்குகள் மற்ற வேட்பாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். குறிப்பிட்ட வேட்பாளர், பெரும்பான்மை வாக்குகளைப் பெறும் வரை இத்தகைய கணக்கீட்டு முறை தொடரும். 

புதிய தொழில்நுட்பம்: வழக்கமான மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைமுறை வேறுபாடு நிறைந்தது என்பதால், வழக்கமான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அதில் பயன்படுத்த இயலாது. 

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு மின்னணு வாக்குப் பதிவு இந்திரத்தைப் பயன்படுத்த வேண்டுமெனில், அதற்குரிய தொழில்நுட்பத்தை அதில் புகுத்துவது அவசியம். அத்தகைய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டால், குடியரசுத் தலைவர் தேர்தலிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

இவிஎம்-சாதகம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், அடிக்கடி தேர்தல் நடைபெறுவது வழக்கம். நாடு சுதந்திரம் பெற்றது முதல் தேர்தல்களில் வாக்குகளைப் பதிவு செய்ய காகிதங்களே பயன்பட்டு வந்தன. இந்தியாவில் மக்கள்தொகை அதிகம் என்பதால், ஒவ்வொரு தேர்தலுக்கும் அதிக அளவில் காகிதங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காகிதப் பயன்பாட்டுக்கு அதிக மரங்களை வெட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேள்விக்குறியானது. காகிதங்கள் மூலமாக வாக்குப் பதிவு நடைபெற்றபோது, வாக்குப்பெட்டிகள் சூறையாடப்படல், வாக்கு எண்ணிக்கையில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளும் நிகழ்ந்தன. இத்தகைய பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கிலேயே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

முதலில் கேரளத்தில்... 

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை உருவாக்குவதற்கான பணிகள் 1970-களிலேயே தொடங்கிவிட்டன. 1979-ஆம் ஆண்டில் இயந்திரத்தின் மாதிரி வடிவம் உருவாக்கப்பட்டது. ஹைதராபாதில் உள்ள இந்திய மின்னணுவியல் கழகம் (இசிஐஎல்) இயந்திரத்தை வடிவமைத்தது. பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனமும் இயந்திரத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்களித்தது. 

கேரளத்தில் 1982 மே மாதம் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கு சட்டவிதிகளில் அனுமதியில்லை எனக் கூறி தேர்தல் முடிவுகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதையடுத்து, தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவதற்கேற்ற வகையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில்  மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டது.


முழு அளவில் பயன்பாடு 

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை அரசியல் கட்சிகளிடமிருந்து 1998-ஆம் ஆண்டில்தான் தேர்தல் ஆணையம் பெற்றது. அதே ஆண்டில் மத்திய பிரதேசம், தில்லி, ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களின் 25 தொகுதிகளில் இவிஎம் பயன்படுத்தப்பட்டது. 

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தல்களில் இவிஎம் அனைத்துத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டது. அப்போதுமுதல் நடைபெற்று வரும் அனைத்து மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com