திரள வேண்டிய எதிர்க்கட்சிகள் திசைக்கொரு பக்கமாக... குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில்...

எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு மமதா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ள நிலையில் தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி...
திரள வேண்டிய எதிர்க்கட்சிகள் திசைக்கொரு பக்கமாக... குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில்...

குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு 22 கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.

உடனடியாக, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலரான சீதாராம் யெச்சூரி, மம்தா மேற்கொள்ளும் இந்த ஒருதலைப்பட்சமான முயற்சியால் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாதிக்கும் என்று எதிர்வினையாற்றியிருக்கிறார்.

ஏற்கெனவே, குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியானவுடனேயே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அறிவுறுத்தலின்படி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை காங்கிரஸின் மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சந்தித்துப் பேசியுள்ளார். மற்றவர்களுடனும் பேசிக் கொண்டிருப்பதாகவும் அறிவித்தார்.

வழக்கமாக இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்கள் பரஸ்பரம் தலைவர்களுக்குள் பேசி, நாள், இடம் போன்றவை எல்லாம் தீர்மானிக்கப்பட்ட பிறகே அறிவிக்கப்படும். ஏற்கெனவே, இதுபற்றிப் பேசி, இப்படியோர் ஆலோசனைக் கூட்டத்தை வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ள ஜூன் 15 ஆம் தேதி நடத்த காங்கிரஸ் தலைமையிலான அணியினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில்தான் யாருடனும் ஆலோசனை கலக்காமல் – அல்லது யாரேனும் ஒருசில தலைவர்களுடன் மட்டும் பேசியிருக்கலாம் – அதே ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள (தான் நடத்தவுள்ள) எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு 22 தலைவர்களுக்கு மம்தா கடிதம் எழுதியுள்ளார்.

இந்தப் பட்டியலில் காங்கிரஸ் அணியில் உறுதியாகவுள்ள திமுக, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இன்றைய நிலவரப்படி அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே பாரதிய ஜனதா கட்சி அணி நிறுத்தக் கூடிய வேட்பாளரைத் தோற்கடிக்க முடியும். சில எதிர்க்கட்சிகள் கழற்றிக்கொண்டாலோ, விலகி நின்றாலோ, தனியே ஓரணி அமைத்து, ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறிக்கொண்டு, இன்னொரு வேட்பாளரை நிறுத்தினாலோ பா.ஜ.க.வின் வெற்றி உறுதி, எதிர்க்கட்சிகளின் தோல்வி சர்வ நிச்சயம்.

நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள், சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு குறைந்துவிட்ட இந்த சூழ்நிலையில், எதிர்க்கட்சிகள் வலுவை வெளிப்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளின் குரல் ஒன்றிணைந்து ஒலிக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மம்தா பானர்ஜி குறிப்பிட்டிருந்தபோதிலும், ஏற்கெனவே இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், தனியாக இவரும் ஓர் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது பலரையும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மம்தாவின் உள் நோக்கம் அல்லது உள்ளபடியே நோக்கம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைதானா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, இப்படியொரு கடிதத்தை மம்தா எழுதியிருப்பது பற்றி ஊடகங்கள்வழிதான் தெரிந்துகொண்டேன் என்றிருக்கிறார்.

இதேபோன்ற, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன், ஏற்கெனவே, தெலங்கானாவின் முதல்வரும் ராஷ்டிரிய சமிதித் தலைவருமான சந்திரசேகர ராவ், சரத் பவார், உத்தவ் தாக்கரே, அரவிந்த் கேஜரிவால் போன்றோரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு இன்னமும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம் போன்ற கட்சிகள் இன்னமும் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி அணியிலுள்ள ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த பிகார் முதல்வர் நிதீஷ் குமாரும் தங்கள் நிலைப்பாடு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

நாடாளுமன்றத்தில் பெரும்பாலான பிரச்சினைகளில் ஆளும் கூட்டணியையே ஆதரித்துக் கொண்டிருக்கும் பகுஜன் சமாஜ் கட்சி, குடியரசுத் தலைவர் தேர்தலிலும் அவர்களையே ஆதரித்தால் வியப்பதற்கில்லை.

பாரதிய ஜனதா கட்சிக்கு அடுத்தபடியாக, அனைத்து எதிர்க்கட்சிகளிலும் முதலாவதாக,  மிக அதிக அளவிலான வாக்குகளைப் பெற்றிருப்பது காங்கிரஸ் கட்சி மட்டுமே. பிற கட்சிகள் எல்லாமே அதற்கு அடுத்தடுத்த இடங்களில்தான் இருக்கின்றன. காங்கிரஸைத் தவிர்த்து, இவற்றால் தனித்தோ, அல்லது இவற்றில் சில கட்சிகள் மட்டும் ஒன்றிணைந்தோ எதையும் செய்ய இயலாது, பாரதிய ஜனதாவுக்கு வெற்றி தேடித் தருவதைத் தவிர.

இன்றைய நிலையில், காங்கிரஸ் தரப்பிலிருந்து ஒருபுறமும் திரிணமூல் தரப்பிலிருந்து ஒருபுறமும் தெலங்கானா ராஷ்டிர சமிதி தரப்பிலிருந்து ஒருபுறமுமாக ‘எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக’ முயற்சிகள் நடத்தப்படுகின்றன.

ஆனால், இவையெல்லாமும் பாரதிய ஜனதாவுக்கு எதிர்நிலையில் ஒன்றிணைந்தால் மட்டுமே எதிர்க்கட்சிகளின் வெற்றி சாத்தியம் என்பது அரசியலே அறியாத சிறு குழந்தைக்குக்கூட தெரியும்; தலைவர்களுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொருத்தவரை, எதிர்க்கட்சிகளுடன் ஒப்பிட, குறைவான வாக்குகளே பெற்றிருந்தபோதிலும் அது மிகமிகக் குறைவு என்பதும் எளிதில் சமாளித்து வெற்றி பெற முடியும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பெறக் கூடிய வெற்றியானது அடுத்துவரக் கூடிய மக்களவைத் தேர்தலிலும் ஆறு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வெற்றி பெறுவதற்கான தார்மிக வலுவைத் தரக் கூடியது என்பது குறிப்பிடத் தக்கது.

எனவே, பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் நிலவும் கருத்து வேற்றுமைகளைக் களைந்து ஒன்றுசேர வேண்டிய தருணம் இது என்று கருதப்படும்  நிலையில், இப்படி ஆளுக்கொரு பக்கம், கட்சிக்கொரு பக்கம் குறுக்குசால் ஓட்டிக்கொண்டிருந்தால்... இன்னும் சில நாள்களில் குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில் தெளிவு பிறக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com