வேட்பாளர் வெங்கைய நாயுடு? குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில்...

குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் தற்போதைய குடியரசுத் துணைத் தலைவரான வெங்கைய நாயுடு நிறுத்தப்படுவாரா?
குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில்...  வேட்பாளர் வெங்கைய நாயுடு?
குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில்... வேட்பாளர் வெங்கைய நாயுடு?

குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் தற்போதைய குடியரசுத் துணைத் தலைவரான வெங்கைய நாயுடு நிறுத்தப்படுவாரா?

குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள். மாநிலங்களின் மக்கள்தொகை போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு உறுப்பினரின் வாக்கிற்கும் மதிப்பு அளிக்கப்படுகிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில் ஆளும் பாரதிய ஜனதாவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய அளவுக்குத்  திட்டவட்டமான பெரும்பான்மை இல்லை. 

தற்போதுள்ள மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள்  767 பேர்.  இவர்களின் வாக்கு மதிப்பு 5.36 லட்சம். அனைத்து மாநிலங்களின்  சட்டப்பேரவை  உறுப்பினர்கள் 4,790 பேர். இவர்களுடைய வாக்குகளின் மதிப்பு  5.42  லட்சம். ஆக,   மொத்தம் 10.78 லட்சம்.

தற்போது ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வசம் 5.26 லட்சம்  வாக்குகளும் ஐக்கிய முற்போக்கு அணியின் வசம் 2.59 லட்சம் வாக்குகளும்  இருக்கின்றன.

இந்த இரண்டையும் சாராத திரிணமூல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்,  பிஜு ஜனதா தளம், சமாஜவாதி, இடதுசாரிகள் மற்றும் பிற கட்சிகளின் வசம் 2.92 லட்சம் வாக்குகள் இருக்கின்றன.

காங்கிரஸுடன் பிற கட்சிகள் அனைத்தும் சேர்த்து, 5.51 லட்சம் வாக்குகள்  வைத்திருக்கின்றன. இது, தேசிய ஜனநாயகக் கூட்டணியைவிட, 26 ஆயிரம் வாக்குகள் அதிகம். எனவே, தேஜக வெற்றி பெற சுமார் 14 ஆயிரம் வாக்கு மதிப்பு  அதிகம் பெற வேண்டும்.

குடியரசுத் தலைவராகத் தன்னுடைய வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமானால் மேலும் சில கட்சிகளின் உறுதியான ஆதரவை பா.ஜ.க. அணி அவசியம் பெற்றாக வேண்டும். ஆந்திரத்தின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஒடிசாவின் பிஜு ஜனதா தளம்  ஆகியவற்றின் ஆதரவு கிடைத்தாலே போதுமானது. இதுபற்றி இதுவரை உறுதியாக எதுவும் தெரியவில்லை.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேறு ஒருவரை நிறுத்துவதைவிடவும்  குடியரசுத் துணைத் தலைவராகவுள்ள எம். வெங்கைய நாயுடு  நிறுத்தப்பட்டால், மிகவும் எளிதாக வெற்றி பெற முடியும் எனக்  கருதப்படுகிறது.

வெங்கைய நாயுடுவின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.  ஏற்கெனவே, கடந்த காலங்களில் துணைத் தலைவராக இருந்தவர்கள், பின்னர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

வெங்கைய நாயுடுவைப் பொருத்தவரை நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டவர் என்பதுடன் சாதாரண மக்கள் மத்தியிலும்கூட பிரபலமானவர்.

தவிர, பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களுடனும்  கட்சி அரசியலைத் தாண்டியும் நல்ல நட்பைப் பாராட்டி வருபவர். பாரதிய ஜனதா கட்சிக்குள்ளும் பரவலான செல்வாக்கைப் பெற்றவர்.

மாணவப் பருவம் தொடங்கி அரசியலுக்கு வந்துவிட்ட ஆந்திர அரசியலில்  படிப்படியாக உயர்ந்து, அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சித் தலைவராகவும்  இருந்திருக்கிறார்.

மேலும், பிரதமர் வாஜபேயி அமைச்சரவையிலும் நரேந்திர மோடி அமைச்சரவையிலும் அமைச்சராகப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மிகச் சிறந்த பேச்சாளரும்கூட.

வெங்கைய நாயுடு வேட்பாளராக நிறுத்தப்படும்பட்சத்தில், ஆந்திரத்திலும் தெலங்கானாவிலுமுள்ள காங்கிரஸ் தவிர்த்த பிற கட்சிகள் அனைத்துமே - தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் - இவரை ஆதரிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. 2007-ல் குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில்  பிரதிபா பாட்டீல் போட்டியிட்டபோது, மராட்டியத்திலிருந்து ஒருவர் குடியரசுத் தலைவராவதைத் தடுக்கலாமா என்று குறிப்பிட்டு, பாரதிய ஜனதா அணியிலிருந்த சிவசேனை அவரை ஆதரித்தது குறிப்பிடத் தக்கது.  

மேலும், திமுக போன்ற எதிர் முகாமிலுள்ள கட்சிகளுடனும் நல்ல தொடர்பில் இருப்பதாகக் கருதப்படும் (அண்மையில் சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற விழாவில், மறைந்த திமுக  தலைவர் மு. கருணாநிதியின் சிலையை வெங்கைய நாயுடு திறந்துவைத்தார்) இவரால் தனிப்பட்ட முறையிலும் கூடுதலான ஆதரவைத் திரட்ட முடியும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வெங்கைய நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், இயல்பாகவே எதிர் அணி பலவீனப்பட்டு விடும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.

தொடக்கத்திலிருந்தே இவருடைய பெயர்  பேசப்பட்டுவந்த போதிலும் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு அவ்வளவாக செய்திகளில் அடிபடவில்லை. எனினும்,  வேட்பாளர் தேர்வுக்கான பட்டியலில் எளிதில் வெற்றி பெறக் கூடியவர்களில் ஒருவரான வெங்கைய நாயுடு  இல்லை என்று ஒரேயடியாகக் கூறிவிட இயலாது. 

ஆனால், ஒரேயொரு சிக்கல் இருக்கிறது, அவருடைய பலமே  பலவீனமாகவும்  இங்கே கருதப்படுகிறது. 

குடியரசுத் தலைவர் பதவி என்னதான் அலங்காரப் பதவி, தனிப்பட்ட அதிகாரங்கள் இல்லாதது  என்றெல்லாம் கூறப்பட்டாலும் நாட்டின் மிகவும் சிக்கலான தருணங்களில், தனிப்பட்ட முறையில், மிக முக்கியமான முடிவுகளை எடுக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

அனைவராலும் மதிக்கப்படுபவராக, அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும்  நல்ல தொடர்பில்  இருக்கிற வெங்கைய நாயுடு போன்ற  தனித்த  செல்வாக்கு கொண்ட ஆளுமையொருவரைக் குடியரசுத் தலைவர் போன்றதொரு பதவிக்குக் கொண்டுவருவதை பாரதிய ஜனதா கட்சியின் உயர்நிலைத் தலைவர்களே விரும்புவார்களா? என்பதுதான்  பெரிய கேள்வி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com