அக்னிபத்: நாடு முழுவதும் நடந்தது என்ன?

அக்னிபத் திட்டத்து எதிராக இளைஞர்கள் ஒருபுறம் போராட்டம் நடத்த, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க, ஆளும் பாஜக தரப்பினர் திட்டத்துக்கு ஆதரவுக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.
அக்னிபத்: நாடு முழுவதும் நடந்தது என்ன?


அக்னிபத் திட்டத்து எதிராக இளைஞர்கள் ஒருபுறம் போராட்டம் நடத்த, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க, ஆளும் பாஜக தரப்பினர் திட்டத்துக்கு ஆதரவுக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் ஆள்சேர்க்கும் ‘அக்னிபத்’ என்ற திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு 25% பேர் வரையில் மட்டுமே பணியில் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்பதால் ராணுவத்தில் சேரத் தயாராகும் இளைஞர்கள் பலர் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டம் பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ளன. 

நாடு முழுவதும் அக்னிபத் திட்டம் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) நடந்தவை:

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ட்வீட்:

"வறுமை அதிகரிப்பு, பணவீக்கம், வேலையின்மை, தவறான கொள்கைகள் உள்ளிட்டவை போன்ற சூழல்களில், ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கு புதிய நடைமுறையை மத்திய அரசு அறிவித்திருப்பது இளைஞர்களிடத்தில் கவலையை உண்டாக்குகிறது. அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது பகுஜன் சமாஜ் கட்சியின் கோரிக்கை."

பிகார்:

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் காரணமாக சாலைப் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு பாஜக எம்.பி. வருண் காந்தி கடிதம்:

"அக்னிபத் திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு 75 சதவிகித ராணுவ வீரர்கள் வேலையிழக்க நேரிடும். அது இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கும். மத்திய அரசு தனது நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்த வேண்டும்." 

சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சனம்:

"அக்னிபத் திட்டம் நாட்டின் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு அபாயகரமானது."

பிகார்:

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்து ரயில்கள் மீது தீ வைக்கப்பட்டன. கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. பாஜக எம்எல்ஏ ஒருவர் காயமடைந்தார். காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி ரயில்களை மறித்த இளைஞர்களை விரட்டியடித்தனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்:

"இளைஞர்களின் குரலைக் கேளுங்கள். அவர்களை அக்னிப் பாதையில் நடக்க வைத்து அவர்களது பொறுமை மீது அக்னிப் பரிட்சை நடத்த வேண்டாம்."

ஹரியாணா:

ஹரியாணாவின் குருகிராமில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இந்தத் திட்டத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலை 19 முடக்கப்பட்டது. கல்வீச்சு சம்பவத்தில் காவல் துறையினரின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இடதுசாரிகள்:

"இந்தத் திட்டத்தை ரத்து செய்து, நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்."

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்:

"வெறும் நான்கு ஆண்டுகளுக்குப் பதில், வாழ்நாள் முழுவதும் நாட்டிற்கு சேவையாற்ற இளைஞர்களுக்கு மத்திய அரசு வாய்ப்பளிக்க வேண்டும்." 

ராஜஸ்தான்:

ராஷ்ட்ரீய லோகாந்திரிக் கட்சி ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜோத்பூர், சிகர், ஜெய்ப்பூர், அஜ்மீர் உள்ளிட்ட இடங்களில் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பேரணி நடத்தினர்.

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி:

"அக்னிபத் திட்டம் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு. 17 முதல் 21 வயதுடைய 10 லட்சம் பேருக்கு இந்தத் திட்டத்தின் கீழ் அடுத்த 18 மாதங்களில் ராணுவத்தில் வேலை கிடைக்கவுள்ளது."

உத்தரப் பிரதேசம்:

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் வெடித்தது. ஆக்ராவில் அரசுப் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே:

"அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை இளைஞர்கள் கைவிட வேண்டும். தங்களது அரசியல் லாபத்திற்காக சிலர் மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்."

ரயில்கள் ரத்து:

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் காரணாக 34-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக இந்திய ரயில்வே அறிவித்தது.

உத்தரகண்ட்:

அமைதிப் போராட்டத்தில் கலந்துகொண்ட கிராமத்து இளைஞர் மணீஷ் சந்த் கூறியதாவது:

"மலைகளில் உள்ள இளைஞர்களுக்கு இருக்கும் ஒரே வேலைவாய்ப்பை மோடி அரசாங்கம் பறிக்கிறது. மலைகளில் உள்ள இளைஞர்களுக்கு ராணுவத்தில் சேருவதைத் தவிர வேறு எந்தவொரு முழுநேர வேலைவாய்ப்பும் கிடையாது."

வேளாண் தலைவர் ராகேஷ் திகைத்:

"பாஜக தலைமையிலான அரசின் தவறான முடிவுகளால் விவசாயிகளைத் தொடர்ந்து தற்போது இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்." 

உத்தரப் பிரதேசம்:

உத்தரப் பிரதேசத்திலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சனிக்கிழமை காலை 11 மணிக்கு அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி அறிவித்துள்ளது.

தில்லி:

அக்னிபத் திட்டத்தின் மூலம் இளைஞர்களைத் தவறாக வழிநடத்துவதாக இளைஞர் காங்கிரஸ் தில்லி ஜந்தர் மந்தரில் பேரணி நடத்தியது.

காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான மணீஷ் திவாரி:

"இது மிகவும் அவசியமான சரியான திசையை நோக்கிய சீர்திருத்தம்."

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா:

"நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தில் நரேந்திர மோடி அரசு விளையாடுகிறது."

முப்படைகளிலும் 2.55 லட்சத்துக்கும் மேலான காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணுவத்துக்கு ஆள் எடுப்பதை மத்திய அரசு நிறுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com