சோனியாவுக்கு என்ன ஆனது? காங்கிரஸ் விளக்கம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மூச்சுக் குழாயில் பூஞ்சைத்தொற்று பாதித்து, கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சோனியா காந்தி
சோனியா காந்தி


புது தில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மூச்சுக் குழாயில் பூஞ்சைத்தொற்று பாதித்து, கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என்று காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது, அண்மையில் கரோனா பாதித்து வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த சோனியா காந்தியின் மூக்கிலிருந்து திடீரென ரத்தம் வந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதையடுத்து அவருக்கு உடனடியாக சிகிச்சைகள் தொடங்கப்பட்டன. அது தொடர்பான சில மருத்துவ நடைமுறைகளும் நேற்று காலை மேற்கொள்ளப்பட்டன. 

மருத்துவப் பரிசோதனையில், சோனியா காந்தியின் மூச்சுக் குழாயில், பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, சோனியா காந்திக்கு கரோனாவுக்கு பிந்தைய உடல்நலப் பாதிப்புகளுடன் இந்த பாதிப்புக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத் துறை நோட்டீஸ்
நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் வரும் 23-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை புதிய அழைப்பாணையை அனுப்பியிருக்கிறது.

கரோனா தொற்றிலிருந்து குணமடையாததால் விசாரணைக்கு ஆஜராவதற்கு கூடுதல் அவகாசம் வழங்கவேண்டும் என்று அவா் கோரிக்கை விடுத்ததன் பேரில், இந்த புதிய அழைப்பாணையை அமலாக்கத்துறை அனுப்பியது.

முன்னதாக, ஜூன் 8-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியாவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடா்ந்து, மருத்துவா்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டது.

இதற்கிடையே, சோனியாவின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, இதே வழக்கில் அமலாக்கத் துறையின் புதிய அழைப்பாணையின் அடிப்படையில் 13-ஆம் தேதி முதல் தொடர்ந்து 3 நாள்கள் தில்லியில் உள்ள அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் விசாரணைக்கு ஆஜாரானார்.

சோனியாவும் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை கடந்த 2010-இல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜகவைச் சோ்ந்த சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்த பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com