ரயில் பயணத்தின் போது ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வது எப்படி?
ரயில் பயணத்தின் போது ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வது எப்படி?

ரயில் பயணத்தின் போது ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வது எப்படி?

ராஜ்தானி போன்ற சில விரைவு ரயில்களில் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்காமல் அனைத்துப் பயணிகளுக்கும் உணவு வழங்கப்படுகிறது.


இந்திய ரயில்வேயில் இயக்கப்படும் விரைவு ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக, ஐஆர்சிடிசியே உணவு சேவையையும் வழங்குகிறது. ராஜ்தானி போன்ற சில விரைவு ரயில்களில் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்காமல் அனைத்துப் பயணிகளுக்கும் உணவு வழங்கப்படுகிறது.

இப்படி ரயில் பயணிகளின் உணவுத் தேவையை இந்திய ரயில்வே பல வழிகளில் நிறைவேற்றி வந்தாலும், வீட்டிலிருப்பது போல, நாம் விரும்பும் உணவை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து சாப்பிடுவது என்பது கூடுதல் சிறப்புத்தானே?

எனவே, அந்த வாய்ப்பையும் ஐஆர்சிடிசியின் இ-கேட்டரிங் சேவை நிறைவேற்றிக் கொடுக்கும். அதாவது, இந்த சேவை மூலம் நீங்கள் விரும்பும் உணவை ஆர்டர் செய்தால், நீங்கள் பயணிக்கும் ரயில் அடுத்த ரயில் நிலையங்களில் நிற்கும் போது, உங்கள் இருக்கைக்கே உணவு வந்து சேரும்.

கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறதா? ஆம் இது உண்மைதான். எனவே, ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா?

இந்த திட்டம் பற்றிய சில முக்கிய விஷயங்கள்
உங்களுக்கான உணவை ஆர்டர் செய்யும் போது, நீங்கள் உறுதி செய்யப்பட்ட அல்லது காத்திருப்பு ரயில் டிக்கெட்டை எடுத்திருக்க வேண்டும். பிஎன்ஆர் எண், ரயிலின் விவரங்களை பதிவு செய்ய வேண்டியது இருக்கும்.

இ-கேட்டரிங் வசதி மூலம், நீங்கள் ஆர்டர் செய்யும் உணவுக்குரிய பணத்தை ஆன்லைன் மூலம் அல்லது நேரிலோ வழங்கும் வசதி உள்ளது.

இந்த வசதி தற்போதைக்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும்.

ஒரு வேளை, உங்கள் ரயில் தாமதமாக வந்தாலோ, உணவு வழங்கப்படவில்லையென்றாலோ, முழு பணமும் உங்களுக்கு திரும்ப செலுத்தப்படும்.

ரயில் பயணத்தின்போது எவ்வாறு ஆர்டர் செய்வது?
தற்போதைக்கு உணவு ஆர்டர் செய்ய மூன்று வழிமுறைகள் உள்ளன. இ-கேட்டரிங் இணையதளம் அல்லது ஃபூட் அண்ட் டிராக் எனப்படும் செயலி அல்லது 1323 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உணவை ஆர்டர் செய்யலாம்.

இ-கேட்டரிங் மூலம் உணவு ஆர்டர் செய்ய..
முதலில் www.ecatering.irctc.co.in என்ற இணையதளத்தில் உங்கள் பிஎன்ஆர் எண்ணை பதிவு செய்யுங்கள்.
2. அதன் கீழே இருக்கும் ரயில் நிலையங்களின் பட்டியலில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்.
3. அங்கிருக்கும் உணவகங்களின் பட்டியல் வரும். அதை தேர்வு செய்யவும்.
4. உங்களுக்குப் பிடித்த உணவை அர்டர் செய்து பணத்தை செலுத்தவும்.
5. உங்களுக்கு டெலிவரி கோடு என்ற எண் வழங்கப்படும். நீங்கள் ஆர்டர் செய்த உணவை பெறும் போது அந்த டெலிவரி கோடு எண்ணை சொல்ல வேண்டும்.

இதே வழிமுறைகளைப் பின்பற்றி செல்லிடப்பேசி செயலியிலும், தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டும் உணவுகளை ஆர்டர் கொடுத்து விரும்பிய உணவை சாப்பிடலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com