
சென்னை: செல்லிடப்பேசிகள் வழியாக கடன் வழங்கும் ஆப்புகள் மூலம் பல மோசடிகள் நடப்பதால், அவற்றை பெயர் குறிப்பிட்டு, டெலீட் செய்யுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார் காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு.
இதனை, தமிழக மக்களுக்கு, தமிழக காவல்துறை விடுக்கும் அன்பு வேண்டுகோளாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க.. அந்த நேர்மை ரொம்ப பிடிச்சிருக்குங்க.. வைரலாகும் விடுமுறைக் கடிதம்
இது குறித்து அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் விடியோவில் சைலேந்திரபாபு கூறியிருப்பதாவது, மக்கள் யாரும் ஏமாறக் கூடாது என்பதற்காக இந்த விடியோவை பதிவிட்டுள்ளேன்.
கடன் கொடுப்பதாகக் கூறி ஏமாற்றும் சில மோசடி ஆப்கள் உள்ளன. யூவால்ட், மாசென் ருபி, லாரி லோன், விங்கோ லோன், சிசி லோன், சிட்டி லோன் போன்ற இந்த ஆப்களை உடனடியாக டெலீட் செய்யவும்.
இவை அனைத்தும் மோசடியான ஆப்கள். இவற்றை செயல்பாட்டிலிருந்து நீக்க காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற ஆப்களை உங்கள் செல்லிடப்பேசிகளில் பதிவிறக்கம் செய்யாதீர்கள். ஒரு வேளை செய்திருந்தால், அதனை உடனடியாக டெலீட் செய்யவும்.
இது தமிழக காவல்துறையின் ஒரு வேண்டுகோள். சில நாள்களாக ஒரு புதிய விதமான ஆன்லைன் மோசடி நடைபெற்றுள்ளது. இதுபோன்ற மோசடியான ஆன்லைன் கடன் கொடுக்கும் ஆப்களை டவுன்லோட் செய்திருப்பவர்கள், கடன் கேட்டு அப்ளை செய்யும் போது, ஆப்பில் புகைப்படம் மற்றும் நான்கு பேரின் தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைக் கேட்டு வாங்கிக் கொள்வார்கள்.
எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு நீங்கள் கேட்ட கடன் தொகையும் கொடுத்துவிட்டு, நீங்க அனுப்பிய உங்கள் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் கொடுக்கவில்லை என்றால் நீங்கள் அனுப்பிய தொடர்பு எண்களுக்கும் மின்னஞ்சலுக்கும் எல்லாருக்கும் அனுப்புவோம் என்று மிரட்டி உடனடியாக 10 ஆயிரம் கொடுக்குமாறு கூறுவார்கள். 10 ஆயிரத்தை அனுப்பினால் பிறகு 50 ஆயிரம், ஒரு லட்சம் வரை கேட்டு மிரட்டுவார்கள்.
எங்கே அதை யாருக்கேனும் அனுப்பிவிடுவார்களோ என்று உங்களுக்கு பயம் வந்துவிடும். அது உண்மையில்லை என்றாலும் அதை யாரும் நம்ப மாட்டார்கள் என்ற எண்ணம்தான் வரும். எனவே, இதுபோன்ற ஆன்லைனில் கடன் வழங்கும் ஆப்களை டவுன்லோட் செய்யவேண்டாம். அவ்வாறு செய்துவிட்டாலும் அதனை உடனடியாக செல்லிடப்பேசியிலிருந்து அகற்றிவிடுங்கள். இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று சைலேந்திர பாபு வலியுறுத்தியுள்ளார்.