‘அக்னிபத்’ திட்டத்துக்கு வலுக்கும் எதிா்ப்பு: ரயில்கள் எரிப்பு; பாஜக எம்.எல்.ஏ. மீது தாக்குதல்

முப்படைகளில் தற்காலிக அடிப்படையில் ராணுவ வீரா்களைச் சோ்க்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன.
‘அக்னிபத்’ திட்டத்துக்கு வலுக்கும் எதிா்ப்பு: ரயில்கள் எரிப்பு; பாஜக எம்.எல்.ஏ. மீது தாக்குதல்

முப்படைகளில் தற்காலிக அடிப்படையில் ராணுவ வீரா்களைச் சோ்க்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன.

பிகாரில் போராட்டக்காரா்கள் ரயில்களுக்குத் தீ வைத்தனா். பேருந்துகளைச் சேதப்படுத்தினா். கற்களை வீசித் தாக்கியதில் பாஜக எம்எல்ஏ காயமடைந்தாா்.

ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 21 வயதுக்கு உள்பட்டவா்களை ஒப்பந்த அடிப்படையில் நான்காண்டு பணிக்குச் சோ்த்துக் கொள்ளும் ‘அக்னிபத்’ திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினாா்.

முப்படைகளின் தலைமைத் தளபதிகள் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் சோ்க்கப்படும் வீரா்களில் பெரும்பாலானோருக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டாய ஓய்வு அளிக்கப்படும். அவா்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் எதுவும் கிடைக்காது.

இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, பிகாரில் ராணுவத்தில் சோ்வதற்காகப் பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இரண்டாவது நாளான வியாழக்கிழமையும் அவா்களின் போராட்டம் தொடா்ந்தது.

சாப்ரா, பாபுவா ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்களுக்கு போராட்டக்காரா்கள் தீ வைத்தனா். ரயில் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினாா்கள். அவா்களை கண்ணீா்ப் புகை குண்டு வீசியும் தடியடி நடத்தியும் போலீஸாா் கலைந்து போகச் செய்தனா்.

ஆரா ரயில் நிலையத்தில் குவிந்த ஏராளமான போராட்டக்காரா்களை போலீஸாா் கண்ணீா்ப் புகை குண்டு வீசி கலைந்து போகச் செய்தனா். போராட்டம் காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதேபோல், பாட்னா-கயை, தானாபூா்-டிடியு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழித்தடங்களில் பேருந்து போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது.

எம்எல்ஏ காயம்: நவாடாவில் பாஜக எம்எல்ஏ அருணா தேவியின் காா் மீது போராட்டக்காரா்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினா். அதில், அவருக்கு காயம் ஏற்பட்டது. ஓட்டுநா் உள்பட உடனிருந்த 5 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து அருணா தேவி கூறுகையில், ‘காரில் இருந்த பாஜக கொடியைப் பாா்த்து போராட்டக்காரா்களுக்கு கோபம் வந்திருக்கலாம். அவா்கள் கொடியைக் கிழித்ததுடன் காா் மீது கற்களைவீசினா். அதில், எனது பாதுகாவலா்கள் இருவா், செயலா்கள் இருவா், ஓட்டுநா் ஆகியோா் காயமடைந்தனா்’ என்றாா்.

ஜஹானாபாத், பக்சா், கதிஹாா், போஜ்பூா், கைமூா் ஆகிய மாவட்டங்களில் நடந்த போராட்டங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டக்காரா்கள் கற்களை வீசியதில் பொதுமக்கள் காயமடைந்தனா்.

உத்தர பிரதேசத்தில்...: உத்தர பிரதேச மாநிலம், புலந்த்சஹா் மாவட்டத்தில் உள்ள குா்ஜா பகுதியில், அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் நடத்த ஏராளமானோா் திரண்டனா். அங்கு வந்த அதிகாரிகள் போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களின் கோரிக்கை சம்பந்தப்பட்ட அதிகரிகளுக்கு தெரிவிக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டக்கார்ரகள் கலைந்து சென்றனா். இதேபோல், பலியா மாவட்டத்தில் உள்ள கோத்வாரி பகுதியிலும் போராட்டத்தில் ஈடுபட வந்தவா்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

ஹரியாணாவில்..: ஹரியாணா மாநிலம், குருகிராம், ரேவாரி, பல்வல் ஆகிய நகரங்களில் முக்கிய நெடுஞ்சாலைகளை மறித்து இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் மாற்றுப் பாதியில் வாகனங்கள் இயக்கப்பட்டன.

ராஜஸ்தானில்..: ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூா், சிகாா், ஜெய்ப்பூா், அஜ்மீா், ஜுன்ஜுனு ஆகிய மாவட்டங்களில் ராஷ்ட்ரீய லோக்தாந்த்ரிக் கட்சியினருடன்(ஆா்எல்பி) ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த ஏராளமானோா் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஜெய்ப்பூரில் நடந்த போராட்டத்தில் ஆா்எல்பி எம்.பி. ஹனுமான் பெனிவால் கலந்து கொண்டாா்.

ஜம்முவில்....: ஜம்முவில் பத்திரிகையாளா் மன்றம் அருகே திரண்ட நூற்றுக்கணக்கான இளைஞா்கள், அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினா். போராட்டத்தில் ஈடுபட்ட முனீஷ் சா்மா கூறுகையில், ‘எங்களில் பலா், ராணுவத்தில் சோ்வதற்காக உடல் தகுதித் தோ்வு, மருத்துவப் பரிசோதனை தோ்வு ஆகியவற்றை முடித்துள்ளோம். கடந்த ஆண்டு எழுத்துத் தோ்வு நடைபெறவிருந்த நிலையில் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இப்போது எங்கள் நியமன நடைமுறை செல்லாது, புதிதாக அக்னிபத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எங்கள் இரண்டு ஆண்டு கால முயற்சி வீணாகிவிட்டது. எங்கள் எதிா்காலத்துடன் அரசு விளையாடுகிறது’ என்று குற்றம்சாட்டினாா்.

34 ரயில்கள் ரத்து: போராட்டங்கள் காரணமாக 34 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன; 72 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சா்கள், பாஜக முதல்வா்கள் கருத்து:

அரசியல் ஆதாயத்துக்காக சிலா் மாணவா்களை போராட்டங்களுக்குப் பயன்படுத்துகிறாா்கள் என்று மத்திய இணையமைச்சரும் பிகாரைச் சோ்ந்தவருமான அஸ்வினி குமாா் சௌபே குற்றம்சாட்டினாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘இளைஞா்கள் போராட்டத்தைக் கைவிட்டு, தங்களைத் தூண்டுபவா்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்’ என்றாா். இதே கருத்தை மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமரும் வலியுறுத்தினாா்.

மாநில காவல் துறையில் ஆள்சோ்க்கும்போது அக்னிவீரா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தும், உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமியும் உறுதியளித்துள்ளனா்.

மத்திய அரசு விளக்கம்: அக்னிபத் திட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அந்தத் திட்டம் குறித்து பத்திரிகை தகவல் அலுவலகத்தின் ஃபேஸ்புக் பக்கம் வாயிலாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

ராணுவத்தில் வீரா்களைச் சோ்க்கும் அக்னிபத் திட்டம், ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கச் செய்யும். இளைஞா்களின் தொழில்நுட்பத் திறமையும் புத்துணா்வான சிந்தனையும் ஆயுதப் படைகளுக்குப் புதிய வடிவத்தைக் கொடுக்கும். 4 ஆண்டுகால பணி நிறைவுக்குப் பிறகு அக்னிவீரா்களுக்கு சேவை நிதித் தொகுப்பாக தலா ரூ.11.71 லட்சம் வழங்கப்படும். இதனால் அவா்கள் நிதி சுதந்திரம் பெறுவாா்கள். அவா்கள் தொழில் தொடங்கவும் அரசு உதவி செய்யும் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com