அக்னிபத் திட்டத்துக்கு ஆள் எடுப்பு எப்போது? அறிவிக்கை வெளியீடு

முப்படைகளுக்கு தற்காலிகமாக 4 ஆண்டுகள் மட்டும் பணியாற்றும் வகையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்துக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அக்னிபத் திட்ட ஆள் எடுப்பு: அறிவிக்கை வெளியீடு
அக்னிபத் திட்ட ஆள் எடுப்பு: அறிவிக்கை வெளியீடு


புது தில்லி: முப்படைகளுக்கு தற்காலிகமாக 4 ஆண்டுகள் மட்டும் பணியாற்றும் வகையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்துக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அக்னிபத் திட்டத்துக்கு ஆட்களை சேர்க்கும் திட்டம் குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டிருக்கும் அறிவிக்கையில், அக்னிபத் திட்டத்துக்கான முன்பதிவுகள் ஜூலை மாதம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://joinindianarmy.nic.in - இல் அக்னிபத் திட்டத்தின் முழு விவரம், சேர்பவர்களுக்கான கல்வித் தகுதி, விதிமுறைகள், வயது வரம்பு உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

ஓட்டப்பந்தயங்கள் போன்ற உடற்தகுதித் தேர்வுகள் ஜூலை முதல் தொடங்கும் என்று அந்த அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முப்படைகளில், அக்னிபத் தொடர்பான அறிவிக்கையை இந்திய ராணுவம் முதலில் வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் மருத்துவப் பிரிவின் தொழில்நுட்ப வீரர்களைத் தவிர்த்து, பிற பிரிவுகளுக்கு ஒரு நுழைவு முனையமாக மட்டுமே அக்னிபத் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் https://joinindianarmy.nic.in என்ற இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையளதளத்தில் முன்பதிவு வசதி தொடங்கியதும், அக்னிபத்தில் இணைய விரும்புவோர் பதிவு செய்து கொள்வது அவசியம். ராணுவத்தில் ஏற்கனவே இருக்கும் எந்த ரேங்க்-கிலும் அக்னிவீரர்கள் வர மாட்டார்கள். அவர்களுக்கு தனி ரேங்க் உருவாக்கப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அக்னிபத் திட்டத்தின் விதிமுறைகள் பற்றி அறிந்து கொள்ள..

அக்னிபத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கான கல்வித் தகுதி குறித்து கூறியிருப்பதாவது, பொதுப் பணிக்கு, 45 சதவீத மதிப்பெண்ணுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனைத்துப் பாடங்களிலும் குறைந்தபட்சம் 33 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

தொழில்நுட்பப் பிரிவு பணிக்கு, விமானப் போக்குவரத்து மற்றும் வெடிபொருள் ஆய்வாளர் பணிக்கு இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்து 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டியது அவசியம்.
 

முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி புரிவதற்கான ‘அக்னிபத்’ திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கடந்த வாரம் அறிமுகம் செய்து வைத்தாா். இந்தத் திட்டத்துக்கு பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்திருந்தது.

இந்த திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், முப்படைகளில் தற்காலிகமாக வீரா்களைச் சோ்க்கும் ‘அக்னிபத்’ திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என்று ராணுவ விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலா் அனில் புரி நேற்று அறிவித்திருந்தார். இதற்கிடையே, இன்று  அக்னிபத் திட்டம் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

அக்னிபத் திட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அந்தத் திட்டத்தின் கீழ் வீரா்களைச் சோ்ப்பதற்கான பணிகளில் முப்படைகளும் ஈடுபட்டுள்ளன.

ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வாய்ப்பு வழங்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அக்னிபத் திட்டத்தில் சோ்வதற்கான வயது வரம்பு தளா்வு, 4 ஆண்டு பணிக்குப் பிறகு அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பாஜக ஆளும் மாநில அரசுகளும் அக்னி வீரா்களுக்கு மாநில அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com