மகாராஷ்டிரத்தில் 22 எம்எல்ஏக்களைக் காணவில்லை! கவிழ்கிறதா கூட்டணி அரசு? கடத்தலில் பாஜக?

மகாராஷ்டிரத்தில் சிவசேனை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சிவசேனை கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்கள் 'காணாமல்போனது' பல்வேறு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் 22 எம்எல்ஏக்களைக் காணவில்லை! கவிழ்கிறதா கூட்டணி அரசு? கடத்தலில் பாஜக?

மகாராஷ்டிரத்தில் சிவசேனை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும்  சிவசேனை கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்கள் 'காணாமல் போனதன்' காரணமாக உச்சகட்ட அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிரத்தில் கடந்த 2019 பேரவைத் தேர்தலில் பாஜக 106 இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும், பாஜக ஆட்சியமைக்கக் கூடாது என்ற எண்ணத்தில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. அவ்வப்போது இந்தக் கட்சிகளுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தாலும் பாஜகவுக்கு வழிவிடக் கூடாது என்ற முனைப்பில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் சட்டமேலவையில் காலியான இடங்களுக்கு நேற்று(திங்கள்கிழமை) தேர்தல் நடைபெற்றது. சட்டமேலவை உறுப்பினர்களை எம்எல்ஏக்கள் தான் தேர்வு செய்வர். 

சட்டப்பேரவையில் மொத்தம் 288 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், சிவசேனை -56  தேசியவாத காங்கிரஸ் -53, காங்கிரஸ் -44, பாஜக - 106 எம்எல்ஏக்களை கொண்டுள்ளனர். 

சட்ட மேலவை உறுப்பினராக ஒருவரைத் தேர்வு செய்ய 26 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், மொத்தமுள்ள 10 இடங்களுக்கு 11 பேர் போட்டியிட்டனர். பாஜகவின் 106 இடங்களுக்கு 4 வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையில், பாஜக 5 வேட்பாளர்களை களமிறக்கி வெற்றி கண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 ஆவது வேட்பாளர் வெற்றி பெற, வேறு கட்சிகளைச் சேர்ந்த, குறைந்தது 24 பேர் வாக்களித்திருக்க வேண்டும். இந்த தேர்தலில் ஆளும் சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தலா இரு இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் கிடைத்துள்ளது. 

மொத்தமுள்ள 288 எம்எல்ஏக்களில் 285 பேர் வாக்களித்துள்ளனர். சிவசேனை கூட்டணிக்கு 169 எம்எல்ஏக்கள் ஆதரவு என்ற நிலையில், 151 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. ஆனால், பாஜக 134 வாக்குகளைப் பெற்று 5 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலிலும் மகாராஷ்டிர மாநிலத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கான தோ்தலில் 3 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. அப்போது பாஜக 123 இடங்களைப் பெற்றிருந்தது. 

இந்நிலையில், சட்டமேலவைத் தேர்தலிலும் குதிரை பேரத்தில் பாஜக ஈடுபட்டுள்ளதாக ஆளும் கூட்டணிக் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 

இதன் தொடர்ச்சியாக இன்று சிவசேனையைச் சேர்ந்த நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சிவசேனை & கூட்டணி கட்சிகளைச் 21 எம்எல்ஏக்களைக் காணவில்லை என்ற தகவலும் மகாராஷ்டிர அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஏக்நாத் ஷிண்டே, எம்எல்ஏக்களுடன் சூரத்தில் உள்ள ஒரு ஓய்வில்லத்தில் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்எல்ஏக்கள் சென்றதற்குக் காரணம் குஜராத் பாஜக நிர்வாகி சி.ஆர். பட்டீல் என்றும் கூறப்படுகிறது. இவர் நீண்ட நாள்களாக ஏக்நாத் ஷிண்டேவுடன் பேசிக்கொண்டிருந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஏனெனில், பாஜக நிர்வாகி சி.ஆர். பட்டீல் ஆமதாபாத்தில் இருந்த நிலையில், இன்று அவசர அவசரமாக தன்னுடைய நிகழ்ச்சிகளை ரத்து விட்டு சூரத் சென்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், சூரத்தில் உள்ள ஹோட்டலில் நேற்று இரவுதான் அறைகள் 'புக்கிங்' செய்யப்பட்டுள்ளன. 

இதுதவிர சில சுயேச்சை எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

ஏக்நாத் ஷிண்டே 
ஏக்நாத் ஷிண்டே 

எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக எம்எல்ஏவுமான தேவேந்திர பட்னாவிஸ் இன்று தில்லி சென்றுள்ளார். 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், இதுகுறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சிவசேனை தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரேவும் கட்சியினருடன் ஆலோசனையில் உள்ளார். 

சட்ட மேலவைத் தேர்தலில் 134 வாக்குகள் பெற்றுள்ள பாஜகவுக்கு இன்னும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்கும்பட்சத்தில் மகாராஷ்டிரத்தில் 'மெகா கூட்டணி' அரசு கவிழ்ந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது. 

கர்நாடகம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, மகாராஷ்டிரத்திலும் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜக களமிறங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com