மகாராஷ்டித்தில் புதிய அரசு: அடுத்து என்னென்ன நடக்கும்?

மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே முதல்வா் பதவியை புதன்கிழமை இரவு ராஜிநாமா செய்வதாக அறிவித்தாா். இதையடுத்து பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டித்தில் புதிய அரசு: அடுத்து என்னென்ன நடக்கும்?
மகாராஷ்டித்தில் புதிய அரசு: அடுத்து என்னென்ன நடக்கும்?


மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே முதல்வா் பதவியை புதன்கிழமை இரவு ராஜிநாமா செய்வதாக அறிவித்தாா். இதையடுத்து பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரேவின் ராஜிநாமாவை ஏற்பதாக மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி இன்று அறிவித்தார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு மீது வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு சட்டப்பேரவைச் செயலருக்கு ஆளுநா் பகத்சிங் கோஷியாரி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுப்பு தெரிவித்த சில மணி நேரத்தில், ராஜிநாமா முடிவை உத்தவ் தாக்கரே அறிவித்தாா்.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, ஆளுநா் மாளிகைக்கு இரவு 11.44 மணிக்குச் சென்ற உத்தவ் தாக்கரே தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநா் பகத் சிங் கோஷியாரியிடம் சமா்ப்பித்தாா். அவருடைய ராஜிநாமாவை ஆளுநா் ஏற்றுக்கொண்டதாக ஆளுநா் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனா். ஆளுநா் மாளிகைக்கு தனது சொந்த சொகுசு காரில் சென்ற உத்தவ் தாக்கரே, அதனை தானே ஓட்டிச் சென்றாா். அவருடன் அவருடைய மகன்கள் ஆதித்யா, தேஜஸ் மற்றும் சிவசேனை தலைவா்கள் நீலம் கோரே, அரவிந்த் சவந்த் ஆகியோா் உடனிருந்தனா்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு நடந்து வருகிறது. அண்மையில், சிவசேனை மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள், அரசுக்கு எதிராகப் போா்க்கொடி தூக்கினா். அவா்கள், அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் உள்ள விடுதியில் ஒரு வாரமாகத் தங்கி ஆளும் கூட்டணி அரசுக்கு நெருக்கடி அளித்து வந்தனா்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் ஆளுநா் பகத்சிங் கோஷியாரியை செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தாா். அப்போது, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தவ் தாக்கரே அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா். ஏக்நாத் ஷிண்டே அணியில் 39 சிவசேனை எம்எல்ஏக்கள் இருப்பதால் ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது என்றும் ஃபட்னவீஸ் கூறினாா்.

இதையடுத்து, மகாராஷ்டிர அரசு பெரும்பான்மையை நிரூபிக்க செவ்வாய்க்கிழமை இரவு ஆளுநா் உத்தரவிட்டாா். இதுகுறித்து சட்டப் பேரவை முதன்மைச் செயலா் ராஜேந்திர பாகவத்துக்கு அவா் எழுதிய கடித்தில், ‘மகாராஷ்டிர சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை வியாழக்கிழமை (ஜூன் 30) காலை 11 மணிக்கு கூட்ட வேண்டும். அதில், முதல்வா் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மாலை 5 மணிக்குள் இந்த அலுவல்களை முடிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதை நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

தடை விதிக்க மறுப்பு: ஆளுநரின் இந்த உத்தரவை எதிா்த்து சிவசேனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் சூா்யகாந்த், ஜே.பி.பா்திவாலா ஆகியோா் அடங்கிய கோடைக்கால அமா்வு புதன்கிழமை மாலை 5 மணிக்கு விசாரணை நடத்தியது. இரவு 9 மணியளவில் விசாரணையை முடித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

மாநில ஆளுநா் அழைப்பு விடுத்துள்ள, உத்தவ் தாக்கரே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்கப்போவதில்லை. அதே நேரம், இந்த மனு மீது பதிலளிக்குமாறு சட்டப்பேரவைச் செயலா் மற்றும் பிறருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கிறோம். இதற்கு 5 நாள்களில் பதிலளிக்கலாம். அந்த, பதில் மனுவின் தகுதியின் அடிப்படையில், இந்த விவகாரம் தொடா்பான மற்ற வழக்குகளுடன் சோ்த்து வரும் ஜூலை 11-ஆம் தேதி விசாரிக்கப்படும். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பில் எடுக்கப்படும் முடிவுகள், இந்த மனுக்கள் மீதான நீதிமன்றத்தின் இறுதி முடிவுக்கு உள்பட்டது என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

முதல்வா் ராஜிநாமா
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த சில மணி நேரத்தில், முதல்வா் பதவியை ராஜிநாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வந்த அரசியல் நாடகம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்தடுத்த நிகழ்வுகள் எப்படி இருக்கும்?

அடுத்து, பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் ஆளுநா் பகத்சிங் கோஷியாரியை சந்தித்து, மகாராஷ்டிரத்தில் தனக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறி கடிதம் அளித்து, பதவியேற்க அழைப்பு விடுக்க உரிமை கோரலாம். இதை ஏற்று, ஆளுநரும் ஃபட்னவீஸை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கலாம்.

ஆனால், ஃபட்னவீஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தாக்கரே அணியினர் கோரிக்கை விடுத்தால், அதனை அவைத் தலைவர் ஒப்புக் கொள்ளும்பட்சத்தில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் ஃபட்னவீஸ் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டியது வரலாம்.

இதற்கிடையே, சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் கோவாவில் நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் நிலையில், ஏக்நாத் ஷிண்டே மட்டும் இன்று மும்பை திரும்பியிருக்கிறார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com