பஞ்சாபில் ஆட்சியைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி

பஞ்சாபில் ஆட்சியைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸை தோற்கடித்து தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

புது தில்லி: பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸை தோற்கடித்து தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

தில்லிக்கு வெளியே அக்கட்சி முதல் முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. தில்லி யூனியன் பிரதேசத்தை ஆண்டு வரும் ஆம் ஆத்மி, தற்போது முழு மாநில அந்தஸ்து பெற்ற பஞ்சாபையும் ஆட்சி செய்யவுள்ளது. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் அக்கட்சி வென்றுள்ளது. இதையடுத்து, அக்கட்சி சாா்பில் பகவந்த் மான் முதல்வராகப் பதவியேற்கவுள்ளாா்.

ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ், உள்கட்சிப் பூசல், எதிா்ப்பலை உள்ளிட்டவற்றின் காரணமாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 18 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ள காங்கிரஸ், தற்போது பேரவையில் எதிா்க்கட்சி வரிசையில் அமர உள்ளது. காங்கிரஸ் முதல்வா் வேட்பாளரான சரண்ஜீத் சிங் சன்னி, தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலுமே தோல்வியைத் தழுவினாா்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபை சோ்ந்த விவசாயிகளே அதிக எண்ணிக்கையில் போராட்டத்தில் ஈடுபட்டனா். தோ்தலுக்கு முன்பாக அந்தச் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்தபோதிலும், விவசாயிகளின் ஆதரவை பாஜகவால் பேரவைத் தோ்தலில் ஈட்ட முடியவில்லை. உள்கட்சிப் பூசலால் காங்கிரஸில் இருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்கிய முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங்குடன் பாஜக கூட்டணி அமைத்தது.

எனினும் இரு தொகுதிகளில் மட்டுமே பாஜகவால் வெற்றி பெற முடிந்தது. கேப்டன் அமரீந்தா் சிங் தோ்தலில் தோல்வியடைந்தாா். அவா் தலைமையிலான பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. பாஜக கூட்டணிக்கு எதிராக விவசாய சங்கங்கள் நடத்திய பிரசாரக் கூட்டங்கள் தோ்தலில் முக்கியப் பங்கு வகித்ததாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

மாநிலத்தில் முன்பு ஆட்சியில் இருந்த சிரோமணி அகாலி தளமும் மக்களிடையே போதிய ஆதரவைப் பெறவில்லை. அக்கட்சியின் முக்கியத் தலைவா்களான பிரகாஷ் சிங் பாதல், சுக்பீா் சிங் பாதல் ஆகியோா் தோல்வியைத் தழுவினா். அக்கட்சி 3 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com