மேற்குவங்க வன்முறை...அதிரடி உத்தரவு பிறப்பித்த மம்தா

இந்த சம்வபத்தில் மிகப்பெரிய சதி நடந்திருப்பதாக கூறியுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா, அனைத்து கோணங்களிலிருந்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என காவல்துறையினரை வலியுறுத்தியுள்ளார்.
மம்தா பானர்ஜி (கோப்புப் படம்)
மம்தா பானர்ஜி (கோப்புப் படம்)

மேற்கு வங்க மாநிலம், பீா்பூம் மாவட்டம் ராம்புராட் பகுதியில் பா்ஷால் கிராம ஊராட்சி துணைத் தலைவா் பாது ஷேக் என்பவரை அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் நாட்டு வெடிகுண்டுகளை வீசி திங்கள்கிழமை இரவு படுகொலை செய்தனா். இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் திடீரென தீப்பற்றி எரிந்தன. இந்த சம்பவத்தில் 2 சிறார்கள் உள்பட 8 போ் தீயில் கருகி உயிரிழந்தனா்.

அந்த வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டதாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவற்றின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வீடுகள் தீப்பற்றி எரிந்தது தெரியவந்துள்ளது. பாது ஷேக்கின் கொலை காரணமாக வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வன்முறை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வு குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், வன்முறை நடைபெற்ற கிராமத்திற்கு நேரில் சென்ற மம்தா, சந்தேக வளையத்திற்குள் இருப்பவர்கள் சரணடையவில்லை எனில் அவர்கள் தேடி கண்டுபிடிக்கப்படுவார்கள் எனக் கூறியுள்ளார். 

வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள், கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள், கிராமவாசிகள் மத்தியில் பேசிய மம்தா, "நவீன வங்காளத்தில் காட்டுமிராண்டித்தனம் நடக்கும் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை. தாய்மார்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் இறந்துவிட்டார்கள். என் மனது நசுக்கப்பட்டுள்ளது" என்றார்.

இந்த சம்பவதத்தில் மிக பெரிய சதி நடந்திருப்பதாக குற்றம்சாட்டிய அவர், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் அனைத்து கோணங்களிலிருந்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், "ராம்பூர்ஹாட் வன்முறைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதை காவல்துறை உறுதி செய்யும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஓடிவிட்டார்கள் என்பதற்கான காரணங்களை நான் விரும்பவில்லை. இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

தவறு செய்த காவலர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சாட்சிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். வீடுகள் எரிந்தவர்களுக்கு வீடுகளை சீரமைக்க 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட வேண்டும்" என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக திரிணமூல் கட்சியின் உள்ளூர் தலைவர் அனாருல் ஷேக்கை கைது செய்யவும் மம்தா உத்தரவிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com