வாராணசியில் காசி விஸ்வநாதா் கோயிலையொட்டியுள்ள ஞானவாபி மசூதி
வாராணசியில் காசி விஸ்வநாதா் கோயிலையொட்டியுள்ள ஞானவாபி மசூதி

ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்; நான் அவன் அல்ல பாணியில் பரவும் புகைப்படங்கள்

உத்தர பிரதேச மாநிலம் வாராணசி ஞானவாபி மசூதி வளாகத்தில் நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில், அளவிடும் பணி திங்கள்கிழமை 3-ஆவது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.


உத்தர பிரதேச மாநிலம் வாராணசி ஞானவாபி மசூதி வளாகத்தில் நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில், அளவிடும் பணி திங்கள்கிழமை 3-ஆவது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. அப்போது சிவலிங்கம் ஒன்று அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி உத்தரவின் பேரில் அந்தப் பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது.

ஆனால், அந்த ஆய்வின் முடிவுகளோ, அங்கு பதிவு செய்யப்பட்ட விடியோ பதிவுகளும் புகைப்படங்களும் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அது தொடர்பான பல பொய்யான தகவல்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதுபற்றி பெரிய அளவில் எதுவும் தெரியாத பாமர மக்களும், அந்த சிவலிங்கத்தின் புகைப்படம்தானோ என்று நினைத்து அதனை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி வருகிறார்கள். அதில், 

புகைப்படம் ஒன்று: 


இந்த புகைப்படம்தான், அதிகம் பேரால் பரப்பப்படும் புகைப்படமாக உள்ளது. இதனை ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்டதாக இத்துடன் தகவலை இணைத்திருக்கிறார்கள் விஷமிகள். ஆனால், இதுபற்றி ஆராய்ந்ததில், இந்த சிவலிங்கம் ஒடிசா மாநிலம் பாபா புசந்தேஸ்வர் கோயிலில் அமைந்திருக்கும் சிவலிங்கமாகும். இது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தப் புகைப்படத்திலிருக்கும் சிவலிங்கம் ஞானவாபியில் கண்டெடுக்கப்பட்ட லிங்கம் அல்ல.

புகைப்படம் இரண்டு: 


மசூதியில் கை, கால் கழுவும் இடத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட தகவலால், இரண்டாவதாக, இந்தப் புகைப்படம் பரவி வருகிறது. ஆனால், இதுவும் ஞானவாபியில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ஷரீஃப் தர்காவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று இணையதளங்களில் புகைப்படத்தின் விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த புகைப்படமும் ஞானவாபியில் எடுக்கப்பட்டது அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புகைப்படம் மூன்று


இந்த புகைப்படம் கூட ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்டது என்ற அடைமொழியுடன் சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால், இது உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் எடுக்கப்பட்டது என்று புகைப்படத்துடன் ஆதாரங்களைத் தருகிறது கூகுள்.

புகைப்படம் நான்கு
கடைசி ஆனால் ஆனால் இதுதான் அனைத்துக்கும் உச்சம் என்று சொல்லலாம்.

இந்தப் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பரப்பி, இந்த சிவலிங்கம், 300 ஆண்டுகளுக்குப் பிறகு கிணற்றிலிருந்து வெளியே வந்தார் காசி விஸ்வநாதர் என்றும், முகலாயர் ஆட்சியில் கிணற்றுக்குள் போன காசி விஸ்வநாதர் என்றும் பகிரப்பட்டு வருகிறது.

செய்திகளை தொடர்ந்து பார்த்திருப்பவர்களுக்கு நிச்சயம் இதனை எங்கேயோ பார்த்த நினைவு வரும். வர வேண்டுமே.. ஏன் என்றால், இந்த சிவலிங்கம் வியட்நாமில் நடந்த தொல்லியல் ஆய்வில் பூமிக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் என்று புகைப்படங்களுடன் செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் தொல்லியல் ஆய்வில் இந்த சிவலிங்கம் வெளியுலகுக்கு வந்தது நினைவில் இருக்கலாம். எனவே, இவரும் அவர் அல்ல என்பது நிரூபணமாகிறது.
 

பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதா் கோயில் அருகே இந்த மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதியில் புராதன கோயிலின் சில பகுதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக எழுந்த வழக்கில் விடியோ பதிவுடன் கூடிய அளவிடும் பணிக்கு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது. இந்தப் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வாராணசி மாவட்ட ஆட்சியா் கெளசல் ராஜ் சா்மா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘2 மணி நேரத்துக்கும் மேலாக விடியோ பதிவுடன் கூடிய அளவிடும் பணி நடைபெற்று வந்த நிலையில், காலை 10.15 மணியளவில் பணி நிறைவடைந்தது. இந்தப் பணி அனைத்து தரப்பினருக்கும் திருப்திகரமாக அமைந்தது’ என்றாா்.

இதனிடையே ஆய்வுப் பணியின்போது மசூதி வளாகத்தில் இஸ்லாமியா்கள் தொழுகைக்கு முன்பாக கைகளை சுத்தம் செய்யும் பகுதியில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக ஹிந்துக்களின் தரப்பு வழக்குரைஞா் மதன் மோகன் யாதவ் செய்தியாளா்களிடம் கூறினாா். எனவே அந்த சிவலிங்கத்தைப் பாதுகாக்கக் கோரி, உடனடியாக உள்ளூா் நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்தாா்.

மனுவை விசாரித்த நீதிபதி, சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை ‘சீல்’ வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து அப்பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தின் புகைப்படம் எதுவும் வெளியிடப்படவில்லை. எனவே, இதுவரை ஏதேனும் இதுபோன்ற தகவலை பரப்பியிருந்தால் அதனை டெலீட் செய்யவும். இனியும் உங்களுக்கு அதுபோன்ற தகவல்கள் வந்தால் அதனை தவிர்த்துவிடவும் என்பதே முக்கிய தகவலாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com