'அவ்விய நெஞ்சத்தான்..'  திருக்குறளுடன் பேசத் தொடங்கிய பேரறிவாளன்

செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன், எல்லாருக்கும் வணக்கம் என்று கூறி, அவ்விய நெஞ்சத்தான் என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பேசத்தொடங்கினார்.
செய்தியாளர்களை சந்தித்தார் பேரறிவாளன் (கோப்பிலிருந்து)
செய்தியாளர்களை சந்தித்தார் பேரறிவாளன் (கோப்பிலிருந்து)


ஜோலார்பேட்டை: விடுதலை செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன், எல்லாருக்கும் வணக்கம் என்று கூறி, அவ்விய நெஞ்சத்தான் என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பேசத்தொடங்கினார்.

31 ஆண்டுகள் சிறைவாசத்தைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கும் பேரறிவாளன், சுதந்திரக் காற்றை சுவாசித்தபடி, முதல் முறையாக இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன் கூறியதாவது, அனைவருக்கும் வணக்கம்.

'அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
' என்பது திருக்குறள். 
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம்.. கெட்டவர்கள் நன்றாக வாழ்வதும், செவ்வியான் கேடும்.. நல்லவர்கள் வீழ்ந்து போவது, துன்பத்தில் ஆழ்த்தப்படுவதை உலகம் நினைத்துப் பார்க்கும் என்பது பொருள். அது இயற்கையின் நீதியா. இல்லை. நல்லவன் வாழணும், கெட்டவன் வீழ்வதுதான் நீதி.  என்னுடைய சிறை வாழ்க்கையும் அதுபோலத்தான். 

என் விடுதலையை தமிழ் மக்களும், தமிழர்களும் நினைத்தார்கள். அன்பு செலுத்தினார்கள். ஆதரவு தெரிவித்தார்கள். தங்களது வீட்டில் ஒரு பிள்ளையாக நினைத்தார்கள்.

31 ஆண்டு காலம் எங்கள் அம்மாவின் தியாகம், போராட்டம், ஆரம்பக் காலங்களில் அவர் வெளியில் சந்தித்த அவமானங்கள், புறக்கணிப்புகளை சந்தித்து, வேதனை.. அதையெல்லாம் கடந்து, இடைவிடாது போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

இந்த பெரிய வலிமை கிடைத்தது எப்படி? எங்கள் பக்கம் இருந்த உண்மை, நியாயம், இந்த பெரிய வலிமையைக் கொடுத்தது என்று நம்புகிறேன்.

மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் நாவலை படித்திருக்கிறேன். எனது 18 வயதில் படித்தேன். சிறைக்கு வந்த பிறகும் படித்தேன். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் படித்தேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உணர்வை அது தந்தது. பிறகு, தாய் நாவலுடன் எனது தாயை ஒப்பிட்டேன். இதுவரை அவரிடம் நான் இதனைக் கூறியதில்லை. எனது தாயாரின் இந்த சட்டப்போராட்டத்துக்குப் பின்னால், என் ஒட்டுமொத்த குடும்பத்தின் ஆதரவும் உள்ளது. சகோதரிகள்,  சகோதரியின் கணவர்கள் எல்லாருடைய பலம்தான் இன்று இந்த வெற்றி.

எனது வழக்கில் ஒரு திருப்பு முனையாக இருந்தது வழக்கை விசாரித்த அதிகாரி தியாகராஜன் ஐபிஎஸ், எனது வாக்குமூலத்தை அப்படியே எழுதவில்லை என்றும், அதனை மொழிபெயர்த்ததில் குளறுபடி ஏற்பட்டதையும் வெளிப்படையாக பேட்டி கொடுத்து, அதனை வாக்குமூலமாக உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்ததும் அமைந்திருந்தது.

31 ஆண்டு சட்டப்போராட்டத்தின் போது ஒவ்வொரு முறை வீழும் போதும் எனது தாயாரை பார்க்க நான் அஞ்சுவேன். எனது விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த செங்கொடியின் தியாகம் தான் மக்கள் மத்தியில் எனக்கான ஆதரவை அதிகரித்தது.

எனக்கு சிறைத்துறை முதல் காவல்துறை என பலரும் ஆதரவு அளித்தனர். தமிழக அரசு அதன் முழுமையான ஆதரவை அளித்து எனது விடுதலைக்காக வாதாடியது. நன்றி சொல்ல வேண்டியவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அனைவரையும் நேரில் சந்தித்து எனது நன்றியை தெரிவித்துக் கொள்வேன். தமிழக முதல்வரை நேரில் சந்தித்து எனது நன்றியை தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும், எனது விடுதலைக்காக போராடி வரும் தனது தாய் - தந்தை உயிருடன் இருக்கும் போதே நான் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது என்றும் பேரறிவாளன் குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com