பேரறிவாளன் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ், 1999-இல் பேரறிவாளன் மற்றும் மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை வகித்தார். பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசியதாவது:

"தற்போது 30 ஆண்டுகளாகிவிட்டன. அவர் (பேரறிவாளன்) 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தபோதே விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். அவருக்குத் தற்போது வழங்கப்பட்டுள்ள நிவாரணமானது மற்றவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்குள் எதற்கு வேறுபாடு இருக்க வேண்டும். 

பேரறிவாளன் மற்றும் மீதமுள்ளவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதை பரிசீலிக்குமாறு 2017-இல் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினேன். மற்ற எவரைக் காட்டிலும், சோனியா காந்தியிடமிருந்து குடியரசுத் தலைவருக்குக் கடிதம் செல்வது கூடுதல் முக்கியத்துவமானதாக இருக்கும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். பேரறிவாளனுக்காக மட்டும் இந்தக் கோரிக்கையை வைக்கவில்லை. அனைவருக்கும் சேர்த்துதான் இதை வைத்தேன்.    

அவருக்கு கடிதம் எழுதினேன், அவ்வளவே. அவரிடமிருந்து பதில் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், எந்தப் பதிலும் வரவில்லை" என்றார்.

சோனியா காந்திக்கு இவ்வாறு கடிதம் எழுத வேண்டும் எனத் தூண்டியது எது, இவர்களது குடும்பத்தினர் எவரேனும் உங்களை அணுகினார்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், "அவர்களது குடும்பத்திலிருந்து எவரும் என்னைச் சந்திக்கவில்லை. யார் மூலமாகவும் என்னைத் தொடர்புகொள்ளவில்லை.   

இது (1991 ராஜீவ் காந்தி கொலை வழக்கு) அரிதான வழக்கு. ஒரு குண்டு வெடிப்பால் நிறைய பேர் உயிரிழந்தனர். படுகொலை செய்தப் பெண்ணும் உயிரிழந்தார். பேரறிவாளன் உள்பட மற்ற குற்றவாளிகள் அனைவரும் சதித் திட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல மகாத்மா காந்தி கொலை வழக்கில் நாதுராம் கோட்சே படுகொலை செய்தார். கோபால் கோட்சே சதித் திட்டத்தில் ஈடுபட்டார். 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பிறகு கோபால் கோட்சவை மத்திய அரசு விடுவித்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்குக்கும் இதையே செய்திருக்க வேண்டும். சோனியா காந்திக்கு நான் எழுதிய கடிதத்தில் இதைத்தான் குறிப்பிட்டிருந்தேன்" என்றார்.

பேரறிவாளனைச் சந்திக்க வேண்டும் என விரும்பியது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், "நான் அவரைப் பார்த்ததில்லை. விசாரணை நீதிமன்றங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களை நீதிபதிகள் பார்க்க முடியும். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பார்க்க முடியாது. வழக்கு விவரங்கள் மட்டுமே எங்களிடம் இருக்கும்.

அவர் திருமணம் செய்துகொண்டு, குடும்பத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது எனது தனிப்பட்ட அறிவுரை" என்றார்.

பேரறிவாளன் குறித்த உங்களது கருத்தை ராஜீவ் படுகொலையின்போது உயிரிழந்த மற்றவர்களின் குடும்பத்தினர் எப்படி பார்ப்பார்கள் எனக் கேட்க்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர் "நான் எனது பார்வையை வெளிப்படுத்தினேன். எனது பார்வை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்களின் பார்வையிலிருந்து வேறுபடலாம்" என்றார் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று (வியாழக்கிழமை) விடுதலை செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com