
ஞானவாபி மசூதி வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் கோயில் - ஞானவாபி மசூதி வழக்கு விசாரணையை வாராணசி மாவட்ட நீதிமன்றம் இன்று நிறைவு செய்த நிலையில், நாளை வரை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.கே. விஷ்வேஷா இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.
இதையும் படிக்க.. சிங்கத்திடம் சேட்டை: விடியோவை வைரலாக்க நினைத்த ஊழியருக்கு நேர்ந்த கதி?
ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள ஹிந்து தெய்வங்களை பூஜை செய்வதற்கு அனுமதிக்கக் கோரி வாராணசி சிவில் நீதிமன்றத்தில் ஹிந்து பக்தா்கள் தொடுத்துள்ள வழக்கை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இன்று காலை விசாரணை தொடங்கி 45 நிமிடங்களுக்கு நடைபெற்றது. 4 மனுதாரர்கள் மற்றும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் உள்பட வெறும் 23 பேர் மட்டுமே விசாரணை நடைபெற்ற நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
முன்னாள் வழக்குரைஞர் ஆணையர் அஜய் மிஷ்ரா, நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாராணசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் கோயிலின் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புற சுவரில் ஹிந்து தெய்வங்களின் சிலைகள் இருப்பதாகவும், அவற்றுக்கு தினமும் பூஜைகள் செய்ய அனுமதிக்கக் கோரியும் 5 பெண்கள் வாராணசி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்திருந்தனா். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தை அளவிட உத்தரவிட்டு, அதற்கென தனி ஆணையத்தை நியமித்தது.
மசூதியில் ஆய்வு நடத்த எதிா்ப்பு தெரிவித்து மசூதி நிா்வாகக் குழு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், மசூதி நிா்வாகக் குழு தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு ஏற்புடையதா என்று மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடந்தவாரம் தெரிவித்தனா்.
முன்னதாக, உச்சநீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.
அமைதியாக நடந்த தொழுகை:
ஞானவாபி மசூதியில் பலத்த பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதையொட்டி காசி விஸ்வநாதா் கோயிலின் நான்காவது நுழைவு வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்த வழியாக முஸ்லிம்கள் தொழுகைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
முன்னதாக,
ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள ஹிந்து தெய்வங்களை பூஜை செய்வதற்கு அனுமதிக்கக் கோரி வாராணசி சிவில் நீதிமன்றத்தில் ஹிந்து பக்தா்கள் தொடுத்துள்ள வழக்கை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்யகாந்த், பி.எஸ்.நரசிம்மா ஆகியோரைக் கொண்ட அமா்வு வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஞானவாபி மசூதி வழக்கை விசாரித்து வந்த சிவில் நீதிமன்ற நீதிபதி மீது எந்தப் புகாரோ குறையோ இல்லை. இருப்பினும், வழக்கின் தீவிரத்தை உணா்ந்து நீதித் துறையில் 25-30 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மூத்த நீதிபதி விசாரித்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறோம். இதனால், இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
அயோத்தி பிரச்னைக்குப் பிறகு புதிதாக எந்த வழிபாட்டு இடத்தைக் குறித்தும் சா்ச்சை எழுப்புவதை வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தடை செய்கிறது என்று மசூதி தரப்பினா் விசாரணையின்போது வாதிட்டனா்.
இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. ஒரு குறிப்பிட்ட வழிபாட்டுத் தலத்தின் மதம் சாா்ந்த விஷயங்களைக் குறித்து உறுதி செய்து கொள்வதை, 1991-இல் இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தடுக்கவில்லை என்று நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா்.