ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டதா? பயணிப்பது எப்படி?

ரயில் பயணத்திற்கான முன்பதிவு டிக்கெட் தொலைந்துவிட்டதா? டிக்கெட் நகல் பெற்றுப் பயணிப்பது எப்படி?
ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டதா? பயணிப்பது எப்படி?

முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டைத் தொலைத்துவிட்டால் என்ன செய்வது? பயணம் செய்தே தீர வேண்டும், பணமும் செலவழிக்க இயலாது? கவலைப்பட வேண்டாம், பயணத்தைத் திட்டமிட்டபடி தொடருவதற்கான மாற்று வழிகள் இருக்கத்தான் செய்கின்றன. 

ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதளமான irctc.co.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்தோ அல்லது நேரடியாக டிக்கெட் பெற்றோ ரயிலில் பயணிக்கலாம். 

ஆனால், ஆன்லைன் வசதி இருந்தும் இன்னும் பெரும்பாலான மக்கள் நேரில் சென்று டிக்கெட்டை முன்பதிவு செய்வதைத்தான் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

(முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க வேண்டும் என்றால் பயண நேரத்துக்குச் சற்றுமுன்னர் நேரடியாக சென்று கவுன்டரில் டிக்கெட் வாங்கிக் கொண்டால் போதுமானது. நேரடியாக வாங்கிய டிக்கெட்டை பயணம் முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.)

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த பிரச்னையில்லை. எந்நேரமும் ஆன்லைனில் ஐஆர்சிடிசி இணையதளத்துக்குள் லாக்-இன் செய்து தங்களுடைய டிக்கெட்டைக் காட்டலாம். இன்னும் சொல்லப் போனால்,  பெரும்பாலும் டிக்கெட்டைக்கூட காட்டத் தேவையில்லை. ஏதேனும் ஓர் அடையாள அட்டையை மட்டும் காட்டினால் போதுமானது. 

ஆனால், நேரில் சென்று முன்பதிவு செய்த  டிக்கெட்டைத் தொலைத்துவிட்டால் என்ன செய்வது?

டிக்கெட் நகல் 

ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டால் பதற்றமடைய வேண்டாம். டிக்கெட்டைப் பெற்று பயணம் செய்வதற்கு மாற்றுவழி இருக்கிறது. ​

பயணத்திற்கு முன், உறுதிசெய்யப்பட்ட அல்லது ஆர்ஏசி ரயில் டிக்கெட்டை நீங்கள் தவறவிட்டால் அல்லது தொலைந்துவிட்டால், 'டியூப்ளிகேட் டிக்கெட்' (Duplicate ticket) எனும் டிக்கெட் நகலைப் பெற்றுக்கொள்ளலாம். 

இதுகுறித்து ரயில் நிலைய முன்பதிவு கவுன்டரில் தகவல் தெரிவித்து, டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயன்படுத்திய அடையாளச் சான்றைக் காட்ட வேண்டும். அதன் அடிப்படையில் உங்களுக்கு டிக்கெட் நகல் வழங்கப்படும். 

இதற்காக நீங்கள் சிறுதொகை செலுத்த வேண்டியிருக்கும். 

கட்டணம் எவ்வளவு? 

ரயில்வே பயணத்திற்கான 'சார்ட்' தயாராவதற்கு முன்பாக நீங்கள் டிக்கெட் நகலைப் பெற்றால், முன்பதிவில்லாத / இரண்டாம் தர வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட் என்றால் ரூ. 50 செலுத்த வேண்டும். இதர வகுப்பு டிக்கெட்டுகளுக்கு ரூ. 100 செலுத்த வேண்டும். 

ஒருவேளை 'சார்ட்' தயார் ஆனதற்குப் பின்னர்தான் டிக்கெட் தொலைந்தது தெரிந்தால், உங்கள் பயணக் கட்டணத்தில் 50% தொகையை செலுத்தினால் மட்டுமே டிக்கெட் நகல் பெற முடியும். 

கிழிந்த அல்லது சேதமடைந்த டிக்கெட் என்றால் நகல் டிக்கெட்டுகளுக்கு 25% கட்டணம் செலுத்த வேண்டும். 

அதுபோல, காத்திருப்போர் பட்டியலில் உள்ள கிழிந்த அல்லது சேதமடைந்த டிக்கெட்டுகளுக்கு நகல் கிடைக்காது.

ஆர்ஏசி டிக்கெட்டாக இருந்தால் சார்ட் தயாரானதற்கு பின்னர் டிக்கெட் நகல் பெற முடியாது. 

ஒருவேளை டிக்கெட் நகல் பெற்ற பிறகு உங்களுக்கு ஒரிஜினல் டிக்கெட் கிடைத்தால் ரயில் புறப்படுவதற்கு முன்பாக இரண்டு டிக்கெட்டையும் சமர்ப்பித்தால் டிக்கெட் நகலுக்காக நீங்கள் செலுத்திய கட்டணத்தில் 5% அல்லது ரூ. 20 பிடித்தம் செய்துவிட்டு கட்டணத்தைத் திரும்பப் பெறலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com