சமந்தாவுக்கு வந்துள்ள தசை அழற்சி நோய் யாருக்கு வரும்? தடுக்க முடியுமா?

மருத்துவமனையில் குளுகோஸ் ஏற்றிக்கொண்டே டப்பிங் கொடுப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதிர்ச்சியளித்திருந்தார் சமந்தா.
தசை அழற்சியால் பாதிப்பு
தசை அழற்சியால் பாதிப்பு
Published on
Updated on
2 min read


யசோதா பட வேலைகளில் நடிகை சமந்தா பிஸியாக இருப்பதாக அவரது ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தநிலையில் மருத்துவமனையில் குளுகோஸ் ஏற்றிக்கொண்டே டப்பிங் கொடுப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதிர்ச்சியளித்திருந்தார்.

ஏதோ திடீர் உடல்நலக் குறைவாக இருக்கும் என்றுதான் பலரும் புகைப்படத்தைப் பார்த்ததும் நினைத்திருப்பார்கள். 

ஆனால், அந்த புகைப்படத்துடன், அவர் தனக்கு ஏற்பட்டிருக்கும் உடல்பாதிப்பு குறித்து விளக்கமும் அளித்திருந்தார்.

அவர் வெளியிட்ட பதிவில், யசோதா டிரெய்லருக்கு அனைவரும் அளித்த வரவேற்புக்கு நன்றி. இந்த அன்பு தான் வாழ்க்கையின் முடிவில்லா சவால்களை எதிர்கொள்ள வைக்கிறது. 

சில மாதங்களுக்கு முன்பு மயோசிட்டிஸ் என்கிற நோயால் (தசை அழற்சி) நான் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. நோயின் பாதிப்பு தணிந்த பிறகு அனைவரிடமும் இதைப் பகிர்ந்து கொள்ளலாம் என இருந்தேன். ஆனால் நான் நினைத்ததை விடவும் குணமாக இன்னும் நாள் ஆகும் எனத் தெரிகிறது.

எப்போதும் தைரியமாக இருக்க வேண்டியதில்லை என்பதை மெல்ல மெல்ல உணரத் தொடங்கியிருக்கிறேன். நோயின் பாதிப்பை ஏற்றுக்கொள்ள இன்னும் கடினமாக உள்ளது.  

நான் விரைவில் முழுமையாகக் குணமடைவேன் என மருத்துவர்கள் முழு நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நல்ல நாள்கள், மோசமான நாள்கள் என இரண்டையும் எதிர்கொண்டுள்ளேன். இந்த நாளை என்னால் எதிர்கொள்ள முடியாது எனத் தோன்றிய போது அதுவும் கடந்து சென்றிருக்கிறது. இதனால் இன்னும் ஒரு நாளில் குணமாகி விடும் தருணத்தை நெருங்கி விட்டேன் என்று தான் நினைக்கிறேன். இதுவும் கடந்து போகும் என்று கூறியுள்ளார். மேலும் சிகிச்சை பெற்றுக் கொண்டே டப்பிங் பணியில் ஈடுபடும் புகைப்படத்தையும் சமந்தா பகிர்ந்திருந்தார்.

சமந்தா தற்போது பகிர்ந்திருக்கும் இந்த மயோசிட்டிஸ் என்று அழைக்கப்படும் தசை அழற்சி நோய் என்றால் என்ன? அது எப்படிப்பட்ட பிரச்னைகளை கொடுக்கும் என்பது பலருக்கும் கேள்வியாக உள்ளது.

அதாவது, மயோசிட்டிஸ் எனப்படும் தசை அழற்சி நோய் என்பது, உடல் தசைகளில் ஏற்படும் வீக்கம் என்று பொதுவாகக் கூறலாம். இந்நோய்க்கான காரணம் உடலில் நோய் எதிர்ப்பாற்றலில் ஏற்படும் வேறுபாடு. 

இந்த நோயால் பாதிக்கப்படும் ஒருவரின் உடல் தசைகள் மீது அவரது நோய் எதிர்ப்பாற்றல் நடத்தும் தாக்குதலால் தசைகள் பாதிக்கப்படும். இது பொதுவாக கை தசைகள், தோள்பட்டை, கால்கள், இடுப்பு, அடிவயிற்று தசைகளைத்தான் தாக்கும். இந்த நோய் தாக்கினால், காய்ச்சல், எடை குறைப்பு, மூட்டு வலி, மயக்கம், தசைகளில் வலி உருவாகும்.

நோயின் ஆரம்பக்கட்டத்தில், பாதிக்கப்பட்டவர் எழுந்து நடக்கவே சிரமப்படுவார். நோய் தீவிரமாகும் போது அமர்ந்திருந்தால், எழுந்து நிற்கவும், உறங்கும் போது தனது நிலையை மாற்றவும் கூட சிரமப்படுவார். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், இந்த பாதிப்பு உடலில் இதர தசைப்பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உண்டு. இதனால் திரவ உணவுகளைக் கூட விழுங்க முடியாமல் அவதிப்படக்கூடும். உரிய சிகிச்சை அளிக்காத நிலையில், பாதிக்கப்பட்டவரின் சுவாச மண்டலங்களையும் தாக்கி, நோயாளியால் மூச்சு விட முடியாத நிலையும் ஏற்படலாம்.

எப்படி தாக்குகிறது? தடுக்க வாய்ப்பிருக்கிறதா?

ஒரு சாதாரண சளியை ஏற்படுத்தும் வைரஸ் தொற்றால் ஏற்படும் இருமல், சளி போன்ற தொந்தரவுகள் கூட ஒரு வகையான தசை அழற்சி நோயை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறதாம். அதையும் தாண்டி, சில வகை பாக்டீரியா மற்றும் இதய நோய் சார்ந்த மருந்துகளும் தசை அழற்சியை ஏற்படுத்துகிறதாம். ஆனால், இந்த தசை அழற்சி எனப்படும் மயோசிட்டிஸ் நோயை தடுக்க எந்த வழியும் இல்லை. இது ஒரு உடலில் நோய் எதிர்ப்பாற்றலில் ஏற்படும் மாறுபாடு. இதற்கு உரிய காரணம் என்னவென்பது இதுவரை கண்டறியப்படவில்லை. ஆகையால், இதனை வராமல் தடுப்பது என்பது இயலாத காரியம் என்றும் மருத்துவத் துறை கூறுகிறது.

பெண்களை அதிகம் தாக்குகிறதா?

இந்த நோய் குறிப்பாக பெண்களை அதிகம் தாக்குவதாக புள்ளிவிவரங்கள்  காட்டுகின்றன. யாருக்கேனும் இந்த நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மூட்டு வாத நோய் நிபுணர்களை ஆலோசிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

அதாவது, உடலில் பலவீனம், தொடை அல்லது தோள்பட்டை தசைகளில் பலவீனம், சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் நிலையிலிருந்து எழுந்து நிற்க முடியாமல் அவதிப்படுவது போன்றவைதான் அறிகுறிகள் என்கிறார்கள்.

குணப்படுத்த முடியுமா?
தசை அழற்சி நோயை தடுக்க முடியாது என்றாலும், சிகிச்சை அளித்து நிச்சயம் குணப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை தொடங்கினால், மயோசிட்டிஸ் எனப்படும் தசை அழற்சியை நிச்சயம் குணப்படுத்தலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com