காதலனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றது ஏன்? கல்லூரி மாணவி வாக்குமூலம்

ஆயுர்வேத மருந்து என்றுக் கூறி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்தது ஏன் என்பது குறித்து தமிழக கல்லூரி மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
காதலனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றது ஏன்?
காதலனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றது ஏன்?

வேறொருவருடன் திருமணம் உறுதி செய்யப்பட்ட  நிலையில், காதலனை  வீட்டுக்கு வரவழைத்து ஆயுர்வேத மருந்து என்று கூறி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்தது ஏன் என்பது பற்றி தமிழக கல்லூரி மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கேரள மாநிலம் பாறசாலைப் பகுதியைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவர், தனது காதலி கசாயம் என்று கூறி கொடுத்த திரவத்தைக் குடித்த நிலையில், உடல் உறுப்புகள் செயலிழந்து பலியானார். 

தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர்  காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

கல்லூரி மாணவி கிரீஷ்மா
கல்லூரி மாணவி கிரீஷ்மா

முதற்கட்ட விசாரணையில், ஷரோன் ராஜ் என்ற இளைஞர், அக்டோபர் 14ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனது காதலி வீட்டுக்கு நண்பருடன் வந்துள்ளார். வீட்டுக்குச் சென்ற ஷரோனுக்கு அவரது காதலி, கசாயம் என்று கூறி ஒரு மருந்து கொடுத்துள்ளார். அதைக் குடித்த ஷரோன், தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து 11 நாள்களில் மரணமடைந்தார்.

மருத்துவ பரிசோதனையில், அவர் ஆசிட் போன்ற திரவத்தைக் குடித்ததால், அவரது உடல் உறுப்புகள் சேதமடைந்து பலியானதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்நிலையத்துக்கும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்தது.

சம்பவம் குறித்து இளைஞரின் குடும்பத்தினர் கூறுகையில், மகன் காதலித்து வந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமண நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. என் மகனுடன் பேசுவதை அவளது பெற்றோர் ஏற்கவில்லை. இந்த நிலையில், அந்தப் பெண் என் மகனை அழைத்து, தனது விருப்பத்துக்கு மாறாகத் திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாகக் கூறியுள்ளார். பிறகுதான் வீட்டுக்கு அழைத்து அவர் கசாயம் என்ற பெயரில் ஆசிட் கலந்து கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகக் கூறியிருந்தனர்.

காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குன்னத்துக்கல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தான் காதலித்த ஷரோனிடமிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக, ஆயுர்வேத மருந்து என்று சொல்லி பூச்சி மருந்தைக் கலந்து குடிக்கக் கொடுத்ததை ஒப்புக் கொண்டார். 

கடந்த ஓராண்டுக்கும் மேல் இருவரும் காதலித்து வந்ததாகவும், ஆனால், ராணுவத்தில் பணியாற்றும் ஒருவருடன் கிரீஷ்மாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதால், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், தான் ஷரோனையே திருமணம் செய்வதாக கிரீஷ்மா சமாதானம் செய்துள்ளார்.

தனது ஜாதகப்படி, தான் முதலில் திருமணம் செய்து கொள்ளும் நபர்  இறந்துவிடுவார் என்றும், அதனால் முதலில் ராணுவ வீரரைத் திருமணம் செய்து கொண்டு அவர் இறந்ததும் ஷரோனை திருமணம் செய்துகொள்வதாக கிரீஷ்மா கூறியுள்ளார். ஆனால், இதற்கு ஷரோன் ஒப்புக் கொள்ளவில்லை. இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ராணுவ வீரரிடம்  காட்டி திருமணத்தை நிறுத்துவேன் என்றும் ஷரோன் மிரட்டியுள்ளார். 

இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் ஷரோன் தீவிரமாக இருந்ததால், அவரைக் கொலை செய்வது என்று கிரீஷ்மா முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வீட்டுக்கு வரவழைத்து, ஆயுர்வேத மருந்து என்று கூறி பூச்சிக்கொல்லி மருந்தை குளிர்பானத்துடன் கலந்து கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். 

இதில் விநோதம் என்னவென்றால், தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, உயிரிழக்கும் நிலையிலும் கிரீஷ்மா கலந்துகொடுத்த ஆயுர்வேத மருந்தைக் குடித்த பிறகுதான் தனக்கு இப்படி ஆனது என்று பெற்றோரிடமோ,  மருத்துவர்களிடமோ, காவல்துறையிடமோ கூறவில்லை.

தனது இறுதிக்கட்ட வாக்குமூலத்தில் கூட, காவல்துறையிடம், கிரீஷ்மா தனக்கு விஷம் கலந்து கொடுத்திருக்க வாய்ப்பில்லை என்றே ஷரோன் கூறியுள்ளார் என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்.

கிரீஷ்மாவும் படிப்பில் முதல் இடத்தில் இருப்பதும், பி.எட். முடித்துவிட்டு, எம்ஏ ஆங்கில இலக்கியம் படித்துவருவதாகவும் கூறப்படுகிறது.

உடல் உறுப்புகள் ரசாயன ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் அறிக்கை கிடைத்ததும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்.

ஏற்கெனவே, கேரளத்தில் ஆசிட் கலந்த குளிர்பானத்தை சக மாணவர்  கொடுத்ததால், அதைக் குடித்த 6ஆம் வகுப்பு மாணவர் இதேபோன்று உடல்  உறுப்புகள் செயலிழந்து அக்டோபர் 18 ஆம் தேதி பலியானார். தற்போது ஒரே மாதத்தில் இதுபோன்று இரண்டாவதாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com