தலைமைத் தேர்தல் ஆணையர் "தலை ஆட்டுபவராக இருக்கக் கூடாது'

தலைமைத் தேர்தல் ஆணையர் "தலை ஆட்டுபவராக இருக்கக் கூடாது'

தலைமைத் தேர்தல் ஆணையர் "தலை ஆட்டுபவராக இருக்கக் கூடாது' என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்தது.

தலைமைத் தேர்தல் ஆணையர் "தலை ஆட்டுபவராக இருக்கக் கூடாது' என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்தது.
தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன ஆலோசனை நடைமுறையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் சேர்ப்பதன் மூலமாக தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரத்தை உறுதிப்படுத்த முடியும் என்றும் அது புதன்கிழமை யோசனை கூறியது.
"தற்போதைய நியமன நடைமுறைப்படி, மத்தியில் ஆளும் கட்சி தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் தங்களுக்கு தலை ஆட்டுபவரை தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் நியமிக்க வாய்ப்புள்ளது' என்ற கருத்தையும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
"தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் கொலீஜியம் போன்ற முறையை ஏற்படுத்த வேண்டும்' என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசஃப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு புதன்கிழமையும் விசாரித்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, "ஊதியம், பதவிக் காலம் உள்ளிட்ட விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தனி அதிகாரத்துடன் செயல்படுவதை "தேர்தல் ஆணையச் சட்டம் 1991' உறுதி செய்கிறது. தினேஷ் கோஸ்வாமி குழுவின் அறிக்கையின் அடிப்படையில், இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. எனவே, தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வாய்ப்பில்லை என்று கூற முடியாது. அந்த வகையில், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடும் அளவுக்கு எந்தவொரு சூழலும் எழவில்லை. தேர்தல் ஆணையர்களில் பணி மூப்பு அடிப்படையில், தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கும் நடைமுறை தற்போது சிறந்த முறையில் பின்பற்றப்பட்டு வருகிறது' என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், "இந்த சட்டமானது ஊதியம், பதவிக் காலம் உள்ளிட்ட தேர்தல் ஆணையர்களின் பணி நிபந்தனைகள் தொடர்பான அதிகாரத்தை மட்டுமே அவர்களுக்கு அளிக்கிறது. தேர்தல் ஆணையம் முழு சுதந்திரத்துடன் செயல்படுவதற்கான அதிகாரத்தை இந்தச் சட்டம் வழங்கவில்லை. தற்போதைய நியமன நடைமுறைப்படி, ஆளும் கட்சி தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் தங்களுக்கு தலை ஆட்டுபவரை தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் நியமிக்க முடியும் என்ற சூழல் உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனத்துக்கான ஆலோசனை நடைமுறையிலும், அந்த ஆலோசனை நடைமுறையிலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை சேர்க்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த விரும்புகிறோம். இதுவே, தேர்தல் ஆணையம் தனி அதிகாரத்துடன் சுதந்திரமாக செயல்படுவதை உறுதிப்படுத்தும்' என்றனர்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், "தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் நீதித்துறையைச் சேர்ந்தவர்களின் பங்கும் இருந்தால்தான் சுதந்திரமும் நேர்மையும் நிலைநாட்டப்படும் என்று கருதுவது தவறு. தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக முறையாக சட்டம் இல்லாதபோது, இதுதான் சட்டமாக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தால் கூற முடியாது' என்று தெரிவித்தார். 
நீதிபதிகள் கூறுகையில், "தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது அவசியம் என்று சட்ட ஆணையம் மற்றும் பல்வேறு குழுக்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாட்டில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. நன்னடத்தையுடன் சுதந்திரமாக செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் இருக்க வேண்டியது முக்கியம். ஒருவேளை நாட்டின் பிரதமருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்து, அதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்காமல் போனால், அது ஒட்டுமொத்த நடைமுறையும் செயலிழந்ததற்கு ஒப்பாகாதா? தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுபவர், பிரதமர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் சுதந்திரமாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பவராக இருக்க வேண்டும். இந்த அம்சங்களைத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் கருத்தில் கொள்ள வேண்டும். இதன் காரணமாகத்தான் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் தேர்வுக்கு சுதந்திரமாக செயல்படக்கூடிய மிகப் பெரிய அமைப்பு தேவைப்படுகிறது' என்று தெரிவித்தனர்.

புதிய தோ்தல் ஆணையா் நியமன ஆவணத்தை தாக்கல் செய்ய உத்தரவு

கடந்த 19-ஆம் தேதி புதிய தோ்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம் செய்யப்பட்டது தொடா்புடைய ஆவண கோப்பை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தோ்தல் ஆணையராக இருந்த சுஷீல் சந்திரா கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்ற பிறகு, காலியாக இருந்த அந்த இடத்தில் புதிய தோ்தல் ஆணையராக அருண் கோயல் கடந்த 19-ஆம் தேதி நியமிக்கப்பட்டாா்.

இந்த நியமனத்துக்கு எதிராக மனுதாரா் அனூப் பரன்வால் என்பவா் சாா்பில் அரசியல் சாசன அமா்வு முன்பாக மறுபரிசீலனை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயல் நவம்பா் 17-ஆம் தேதி வரை மத்திய அரசு துறையில் செயலா் அளவிலான அதிகாரியாக பணியாற்றிவந்த நிலையில், அடுத்த நாளான நவம்பா் 18-ஆம் தேதி அவருக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு, நவம்பா் 19-ஆம் தேதியில் தோ்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

தோ்தல் ஆணையா் நியமன விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் விசாரணையை தொடங்கியுள்ள சூழலில், அவசரநிலையில் அருண் கோயலின் நியமனம் நடைபெற்றுள்ளது. எனவே, இந்த நியமனத்தில் குளறுபடி மற்றும் உள்நோக்கம் இருக்க வாய்ப்புள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசஃப் தலைமையிலான அரசியல் சாசன அமா்வு, தோ்தல் ஆணையா் அருண் கோயல் நியமனம் தொடா்பான கோப்பை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டாா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்தாா்.

‘அரசியல் சாசன அமா்வு, தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பான பெரிய விவகாரத்தை விசாரித்து வரும் நிலையில், தனிப்பட்ட மனுதாரரின் மனுவை விசாரிக்க முடியாது’ என்றாா்.

அட்டாா்னி ஜெனரலின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், ‘தோ்தல் ஆணையா் நியமனத்துக்கு கொலீஜியம் போன்ற முறையை அறிமுகம் செய்ய வலியுறுத்தும் மனுவை நீதிமன்றம் நவம்பா் 17-ஆம் தேதி விசாரிக்கத் தொடங்கியது. இந்தச் சூழலில் அருண் கோயல் தோ்தல் ஆணையராக நவம்பா் 19-ஆம் தேதி நியமிக்கப்பட்டுள்ளாா். எனவே, தனிநபா் மனுவும் பிரதான வழக்குடன் தொடா்புடையதே. மேலும், அரசுப் பணியில் இருக்கும் ஒருவா் விருப்ப ஓய்வு பெற, அதற்கான விண்ணப்பத்தை சமா்ப்பித்ததிலிருந்து குறைந்தபட்சம் 3 மாதங்கள் ஆகும் என்ற நிலையில், அருண் கோயலுக்கு உடனடியாக விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, தோ்தல் ஆணையராக அவா் நியமனம் செய்யப்பட்டதில் குளறுபடி எதுவும் நடைபெற்றுள்ளதா என்பதை அறிய விரும்புகிறோம்.

மேலும், இந்த நியமன ஆவணம் நீதிமன்ற பதிவுக்காக மட்டுமே கேட்கப்படுகிறது. அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்காக அல்ல. மத்திய அரசுக்கு வியாழக்கிழமை (நவ.24) வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள், அருண் கோயல் நியமன கோப்பை சமா்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுபவர், பிரதமர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் சுதந்திரமாக பாரபட்சமின்றி 
நடவடிக்கை எடுப்பவராக இருக்க வேண்டும் -அரசியல் சாசன அமர்வு

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com