500 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன
500 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன

500 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டன: நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

அரை கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் மதுரா காவல்துறையினர் தெரிவித்துள்ளது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆக்ரா: காவல்நிலையத்தின் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த கஞ்சாவில் 500 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் மதுரா காவல்துறையினர் தெரிவித்துள்ளது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறப்பு போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ் இந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா போதைப் பொருள் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தபோதுதான் இந்த சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது.

மதுரா காவல்துறையினர் சொன்ன தகவலைக் கேட்டு ஆடிப்போன நீதிபதிகள், முதலில், எலிகளைப் பிடிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், உண்மையிலேயே ரூ.50 லட்சம் மதிப்புள்ள 581 கிலோ கஞ்சாவையும் எலிகள்தான் சாப்பிட்டுள்ளன என்பதற்கான ஆதாரத்தை திரட்ட வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காவல்நிலைய கிடங்குகளில் வைக்கப்பட்டிருக்கும் போதைப் பொருள்களை அழிக்க ஐந்து வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறுகையில், ஷேர்காஹ் மற்றும் நெடுஞ்சாலை காவல்நிலைய காவலர்கள் தரப்பில், கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 581 கிலோ கஞ்சாவை எலிகள் நாசம் செய்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றை காவலர்கள் கண்டுபிடிப்பதும் இயலாத காரியம், மேலும், கிடங்குப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் கஞ்சாவுக்கு பாதுகாப்பு அளிப்பதும் சிரமம். ஆனால், கஞ்சாவை எலிகள் சாப்பிட்டதாகக் கூறுவதை நிரூபிக்கும் ஆதாரங்களைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு, அடுத்த வழக்கு விசாரணையை நவம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது என்றார்.

ஏற்கனவே இதுபோன்ற வழக்கில், 195 கிலோ கஞ்சாவை எலிகள் சாப்பிட்டுவிட்டதாகக் காவல்துறையினர் கூறியபோது, அதற்கான ஆதாரத்தை நீதிமன்றம் கேட்டது. ஆனால், ஆதாரத்தை காவல்துறையினரால் சமர்ப்பிக்க முடியவில்லை.

தற்போதைய வழக்கு குறித்து மதுரா காவல்நிலைய காவலர்கள் கூறுகையில், எலிகள் உருவத்தில் மிகவும் சிறியவை. அவை காவல்துறையினருக்கு எல்லாம் அஞ்சுவதில்லை. காவலர்கள் எல்லா சிக்கலையும் தீர்க்கும் நிபுணர்கள் இல்லை என்றும் கூறுகிறார்கள்.

ஏற்கனவே, இப்படித்தான் எடாஹ் மாவட்டத்தில் கோட்வாலி தேஹத் காவல்நிலையத்தில் 2021ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.35 லட்சம் மதிப்பிலான 1,400 பெட்டி மதுபானங்களையும் எலிகள் குடித்துவிட்டதாகக் காவல்துறையினர் நீதிமன்றத்தில் கூறியிருந்தனர்.  தற்போதும் இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே, காவல்நிலைய அதிகாரி மற்றும் தலைமை கிளெர்க் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை இவர்கள் ரௌடி கும்பல் ஒன்றுக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com