பழனி - கொடைக்கானலுக்கு ரோப் காா்: அறிய வேண்டிய அனைத்து தகவல்களும்

பழனி - கொடைக்கானல் மலைகளுக்கு இடையே ரோப் காா் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை வெளிநாட்டுப் பொறியாளா்கள் குழுவினா் ஆய்வு நடத்தினா்.
பழனி - கொடைக்கானல் மலைத்தொடர்ச்சி இடையே ரோப் கார் சேவையா? மத்திய அரசு திட்டம்
பழனி - கொடைக்கானல் மலைத்தொடர்ச்சி இடையே ரோப் கார் சேவையா? மத்திய அரசு திட்டம்

பழனி - கொடைக்கானல் மலைகளுக்கு இடையே ரோப் காா் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை வெளிநாட்டுப் பொறியாளா்கள் குழுவினா் ஆய்வு நடத்தினா்.

மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டபடி, அனைத்தும் மிகச் சரியான முறையில் நடைபெற்று முடிந்தால், கொடைக்கானல் முதல் பழனி வரையிலான போக்குவரத்து நேரம் 3 மணி நேரத்திலிருந்து ரோப் காரில் வெறும் 40 நிமிடங்களில் பயணிக்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கும்.

பழனி முதல் கொடைக்கானல் வரை சுமாா் 12 கிலோ மீட்டா் தொலைவுக்கு ரோப் காா் நிறுவுவது தொடா்பாக மத்திய அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இத்திட்டத்துக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், தொழிலதிபா்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இவ்விரு மலைகளையும் ரோப் கார் மூலம் இணைக்கும் திட்டம் ரூ.500 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை ஆஸ்திரியா நாட்டை சோ்ந்த தனியாா் ரோப்வே நிறுவனப் பொறியாளா்கள் மாா்க்ஸ், யாா்க்ஸ் ஆகியோா் பழனி மலைக்கோயிலில் பக்தா்கள் பயன்பாட்டில் உள்ள ரோப் காா் சேவையைப் பாா்வையிட்டனா்.

இக்குழுவினா் செவ்வாய்க்கிழமை கொடைக்கானல் வந்தனா். இங்கு தாவரவியல் பூங்கா அருகேயுள்ள குறிஞ்சி ஆண்டவா் கோயில் பகுதியைப் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா். தொடா்ந்து, வில்பட்டி ஊராட்சி புலியூா் பகுதியைப் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.

பொதுவாக, பழனி மலைக்கு வருவோர் கொடைக்கானலுக்கும், கொடைக்கானலுக்கு வருவோர் பழனி மலைக்கும் செல்வது வழக்கம். சாலைவழியாகச் சென்றால் 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதற்கு கிட்டத்தட்ட 3 மணி நேரப் பயணம் ஆகும், வழியில் ஏராளமான கொண்டைஊசி வளைவுகளும் உள்ளன. 

இந்த பகுதிகளை இணைக்க ரோப் கார் சேவை அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தியிருக்கும் பொறியாளர்கள் இன்னும் ஆறு மாதங்களில் தங்களது அறிக்கையை தாக்கல் செய்வார்கள். அது கிடைத்ததும், வான்வழி ஆய்வு நடத்தி, பிறகு வனத்துறை அனுமதி கோரப்படும். பிறகு ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ரோப் கார் சேவை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி - கொடைக்கானல் இடையே குறிஞ்சி ஆண்டவர் கோயில் ஒரு நிறுத்தமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டு நிறுத்தங்களும் தேர்வு செய்யப்படவிருக்கிறது.

பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வெறும் 40 நிமிட பயணத்தில் இயற்கைக் காட்சியையும் கோயிலையும் வந்தடைய முடியும். 

நாட்டில் கொடைக்கானல் - பழனி உள்பட 7 இடங்களில் புதிதாக ரோப் கார் சேவையைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது. இந்த திட்டங்கள் மத்திய - மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஒட்டுமொத்தமாக 18 ரோப் கார் திட்டங்கள், தமிழ்நாடு, ஆந்திரம், மகாராஷ்டிரம், ஜம்மு -காஷ்மீர், திரிபுரா, அருணாசலம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் அமையவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

தமிழகத்தில் பழனி மலைக் கோயில் முதல் கொடைக்கானல் மலைத் தொடர்ச்சியின் மேற்குப் பகுதி வரை சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோப் கார் அமைக்கும் திட்டம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.

மத்திய அரசின் கைவசம் உள்ள ரோப் கார் திட்டங்களில் இதுதான் மிக நீண்ட தூர ரோப் கார் திட்டமாக இருக்கும். 

இதற்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோப் கார் சேவை அமையவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com